'இஸ்கான்' கோவில்களில் 3 நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
'இஸ்கான்' கோவில்களில் 3 நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
ADDED : செப் 01, 2026 08:02 PM
பெங்களூரு: பெங்களூரு 'இஸ்கான்' கோவில்களில், நாளை முதல் மூன்று நாட்கள், கிருஷ்ண ஜெயந்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்ட உள்ளது.
பெங்களூரில் உள்ள இஸ்கான் கோவில்களில், ஸ்ரீ கிருஷ்ணரின் 5,253வது ஜெயந்தி நாளை முதல் மூன்று நாட்கள், விமரிசையாக கொண்டாடப்பட்ட உள்ளது.
ராஜாஜிநகர் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் ஹரே கிருஷ்ணா மலையில் உள்ள இஸ்கான் கோவில்; கனகபுரா ரோடு வசந்தபுரா வைகுண்டா மலையில் உள்ள இஸ்கான் கோவில்களில், நாளை காலை 8:00 மணி முதல், இரவு 10:00 மணி வரையும்; நாளை மறுநாள் காலை 8:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது.
ஒயிட்பீல்டு கே.டி.பி.ஓ.,வில் உள்ள ஹரே கிருஷ்ணா பீல்டில் 4ம் தேதி காலை 8:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை; 5ம் தேதி காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை; சர்ஜாபூர் ரோட்டில் உள்ள ஐவி ரோசா ரெசார்ட் மைதானத்தில் 4ம் தேதி காலை 7:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையும், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.
நான்கு இடங்களிலும் பக்தர்கள் வேத பாரம்பரியத்தின்படி, மூல தெய்வங்களுக்கு மங்கள சேவை, உபசாரங்களை சமர்ப்பிப்பர். அபிஷேகங்கள், ஆரத்திகள், சப்பன் போகம், வெண்ணெய் மிஸ்ரி சேவை, புஷ்பாஞ்சலி சேவை, பல்லக்கு ஊர்வலம், ஜூலன் சேவை ஆகியவை அடங்கும்.
மேலும், நாள் முழுதும் கோ பூஜை, கோடி ஜப யாகம், கீதா பாராயணம், பிரபல கலைஞர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் சுலோக பாராயணம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும்.
இஸ்கான் நிறுவனர் ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாறு, சாதனைகளை விவரிக்கும் சிறப்பு கண்காட்சி அமைக்கப்படும்.
'ஸ்வாகதம் கிருஷ்ணா' என்ற பெயரில் டிஜிட்டல் கொண்டாட்டம் 4ம் தேதி இரவு 8:00 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பப்படும். ஆன்மிக எழுச்சியூட்டும் பக்தி நிகழ்ச்சிகள், அறிவூட்டும் உரைகள், விரிவான அபிஷேகம், ஆரத்தியை கண்டு ரசிக்கலாம்.
ஒயிட்பீல்டில் நடக்கும் நிகழ்ச்சியில், 'உங்கள் சமையலறையில் இருந்து கிருஷ்ணருக்கு அன்புடன்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், 5,253 உணவு பொருட்கள் கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
