கே.எஸ்.ஆர்.டி.சி., பெண் மெக்கானிக்கை கத்தியால் குத்திய ஊழியர் தலைமறைவு
கே.எஸ்.ஆர்.டி.சி., பெண் மெக்கானிக்கை கத்தியால் குத்திய ஊழியர் தலைமறைவு
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 11:54 PM
நெலமங்களா: நெலமங்களாவில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பெண் மெக்கானிக்கை, சக ஊழியர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
பெங்களூரு நெலமங்களாவில் உள்ள அரிசினகுண்டே அருகில் கே.எஸ்.ஆர்.டி.சி., பனிமனை உள்ளது. இங்கு மெக்கானிக்காக பெண் ஊழியர் லட்சுமி, 40, பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் சிவராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், லட்சுமியை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், லட்சுமியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். மார்பு, தோள்பட்டை, கைகள், தொடையில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் பணிமனை மேற்பார்வையாளர் முரளிகிருஷ்ணாவுடன், சிவராஜு தகராறு செய்தார். இதனால் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்தபோது, சிவராஜுக்கு எதிராக லட்சுமி சாட்சி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சிவராஜு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் கோபத்தில் இருந்த அவர், லட்சுமியை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் பணி முடிந்து வந்த லட்சுமியை கத்தியால் குத்தியுள்ளார்.
வழக்கு பதிவு செய்த நெலமங்களா நகர போலீசார், தலைமறைவான சிவராஜை தேடி வருகின்றனர்.
