/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மைக்ரோ' நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டம் அமலானது
/
'மைக்ரோ' நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டம் அமலானது
'மைக்ரோ' நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டம் அமலானது
'மைக்ரோ' நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டம் அமலானது
ADDED : பிப் 14, 2025 05:09 AM
பெங்களூரு: நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, திருப்பி அடைக்க தாமதம் செய்வோரை தொந்தரவு செய்யும் மைக்ரோ நிதி நிறுவனங்கள், ஏஜென்சிகள், கந்து வட்டிக்காரர்களை கட்டுப்படுத்தும் சட்டம், பிப்ரவரி 12ம் தேதியன்று அமலுக்கு வந்துள்ளது.
அரசு தலைமை செயலர் ஷாலினி நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை:
நடுத்தர மக்கள், ஏழைகள் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்த தாமதமானால், அந்நிறுவனங்கள் பலவந்தமாக தொந்தரவு செய்து, கடனை வசூலிக்கின்றன.
இதை கட்டுப்படுத்த மாநில அரசு சட்டம் வகுத்துள்ளது. இந்த சட்ட விதிமுறைகள், பிப்ரவரி 12ல் அமலுக்கு வந்துள்ளது.
யாருக்கு பொருந்தும்?
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம், கடன் வாங்குவோரிடம் எந்த உத்தரவாத ஆவணங்களையும் பெற கூடாது. வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து, எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
அரசின் இந்த உத்தரவு ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகளில் பதிவு செய்யப்படாத மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம், 1.09 கோடி பேர், 60,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்களிடம், எவ்வளவு பேர் கடன் பெற்றுள்ளனர் என்ற தெளிவாக கிடைக்கவில்லை என்றாலும், 40,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதாக தெரிகிறது.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தாங்கள் செயல்படும் மாவட்டங்களின், கலெக்டர்களிடம் அனுமதி பெற்று பதிவு கொள்வது கட்டாயம் இந்நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதம், கடன் பெற்றுள்ளவர்கள், பாக்கியுள்ள கடன் உட்பட அனைத்து விபரங்களை, மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும். நிர்ணயித்த நாட்களுக்குள் விபரங்களை தெரிவிக்காவிட்டால், ஆறு மாதம் சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனைக்கும் ஆளாவர்.
விசாரணை
நிதி நிறுவனங்களின் விவாதங்களை தீர்த்து வைக்க, குறை தீர்ப்பு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம், அரசுக்கு உள்ளது.
பலவந்தமாக கடனை வசூலிக்க முற்படும் நபரும், விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும். இவர்கள் மீது ஜாமின் இல்லா வழக்குகள் பதிவாகும்.
இத்தகைய வழக்குகளை பதிவு செய்ய எந்த போலீஸ் அதிகாரிகளும் மறுக்க கூடாது.
இந்த வழக்குகளை டெபுடி எஸ்.பி., அளவிலான அதிகாரிகள் பதிவு செய்யலாம். சட்டம் தொடர்பாக, கால காலத்துக்கு உத்தரவுகள் வெளியிடும் அதிகாரம், அரசுக்கு இருக்கும்.
இந்த உத்தரவுகள், ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகளில் பதிவு செய்யப்படாத மைக்ரோ நிதி நிறுவனங்களில் பொருளாதார ஒழுங்கை அதிகரிப்பதுடன், இந்நிறுவனங்களில் கடன் பெற்று பாதிப்புக்கு ஆளானோருக்கு பாதுகாப்பு அளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.