காதல் விவகாரத்தில் கத்திக்குத்து சட்ட கல்லுாரி மாணவி உயிரிழப்பு
காதல் விவகாரத்தில் கத்திக்குத்து சட்ட கல்லுாரி மாணவி உயிரிழப்பு
ADDED : ஜூலை 16, 2026 11:58 PM

ஜீவன்பீமாநகர்: காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தப்பட்ட சட்ட கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார். காதலன், அவரது தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரின் எச்.ஏ.எல்., சாலை கோடிஹள்ளியை சேர்ந்தவர் தனுஷ், 27. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. கருத்து வேறுபாட்டால் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனுஷுக்கும், கோடிஹள்ளியில் வசித்த சட்ட கல்லுாரி மாணவி அம்ரிதா, 22, என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனதையும், தனக்கு குழந்தை இருப்பதையும் அம்ரிதாவிடம், தனுஷ் மறைத்து விட்டார்.
ஆனால், இவ்விஷயம் பற்றி, இரண்டு மாதங்களுக்கு முன், அம்ரிதாவுக்கு தெரிந்தது. இதனால் அவர், தனுஷை விட்டு விலகினார். கடந்த, 13ம் தேதி அம்ரிதாவின் வீட்டின் முன், தனுஷின் தம்பி சூர்யா, 25, தகராறில் ஈடுபட்டார். என் அண்ணனை காதலித்து ஏமாற்றி விட்டாய் என்று ரகளை செய்தார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அம்ரிதாவின் முதுகு பகுதியில் சூர்யா குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அம்ரிதாவை அவரது குடும்பத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
அம்ரிதா பெற்றோர் அளித்த புகாரில் தனுஷ், சூர்யா மீது கொலை வழக்குப்பதிவு செய்த, ஜீவன்பீமாநகர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். மகளை இழந்த துக்கத்திலும் அம்ரிதாவின் கண்களை, அவரது பெற்றோர் தானமாக கொடுத்துள்ளனர்.
