மலை மஹாதேஸ்வரா மலையில் கூண்டில் சிக்கிய சிறுத்தை
மலை மஹாதேஸ்வரா மலையில் கூண்டில் சிக்கிய சிறுத்தை
ADDED : மே 24, 2026 11:24 PM

சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வரா மலை அருகில், நாகமலை வனப்பகுதியில் பெண் சிறுத்தை, கூண்டில் சிக்கியது. இது சிறுவனை கொன்ற சிறுத்தையா என விசாரிக்கப்படுகிறது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலையில், இரண்டு மாதங்களுக்கு முன், பாதயாத்திரைக்கு சென்ற இளைஞர் ஒருவரை, சிறுத்தை கொன்றது.
இரண்டு வாரங்களுக்கு முன், பெங்களூரை சேர்ந்த ஹர்ஷித் என்ற 8 வயது சிறுவன், தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன், மலை மஹாதேஸ்வரா மலைக்கு, சுற்றுலா வந்திருந்தார்.
இங்கிருந்து நாகமலைக்கு பாதயாத்திரைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது பாய்ந்த சிறுத்தை, பெற்றோரின் கண் முன், சிறுவனை கடித்து இழுத்து சென்றது. இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் அங்கு வனப்பகுதியில் தேடிய போது, சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் மலை மஹாதேஸ்வரா மலையில், பாதயாத்திரைக்கு தடை விதித்த வனத்துறையினர், சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுத்தை நடமாட்டம் இருந்த இன்டிநத்தா, நாகமலை, மெந்தாரே உட்பட, முக்கியமான இடங்களில் கூண்டு வைத்தனர். இன்டிகநத்தா அருகில் உள்ள கூண்டில், நாய் கட்டப்பட்டிருந்தது.
நேற்று காலை உணவு தேடி வந்த சிறுத்தை, நாயை கொன்று சாப்பிடும் நோக்கில் கூண்டுக்குள் சென்று, சிக்கியது. இது பெண் சிறுத்தையாகும்.
சிறுவனை கொன்றது இதே சிறுத்தையா, வேறா என்பது தெரியவில்லை.
சிறுத்தையை பெங்களூரு புறநகரின், ஆனேக்கல்லில் உள்ள பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு, கொண்டு சென்றனர்.
மேலும் சிறுத்தைகள உள்ளனவா என, அடர்த்தியான வனத்தில் தொடர்ந்து, வனத்துறையினர் தேடுகின்றனர்.
