ADDED : டிச 27, 2025 06:20 AM

இனிப்பு இல்லாத புத்தாண்டை கற்பனையே செய்ய முடியாது. புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை இனிப்பு அதிகரிக்கும். வழக்கமான கேசரி, லட்டு, பாயசம் போன்ற இனிப்புகளை தவிர்த்து, புதுமையான இன்ஸ்டென்ட் சாக்லேட் பர்பி செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் பொடி - 2 கப்
பொடித்த சர்க்கரை - அரை கப்
கோகோ பவுடர் - 4 ஸ்பூன்
பால் அரை - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
முந்திரி, பாதாம் - அலங்ரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும். நெய் சூடானதும், பால் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். கட்டிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும். கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
இதில், சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்க்கவும். சர்க்கரை கரைந்தால் கலவை தளரும். வாணலியில் ஒட்டாமல் வரும் வரை, சில நிமிடங்கள் கிளறவும். அதன்பின் கலவையை இரண்டு பாகமாக பிரிக்க வேண்டும். ஒரு பாகத்தில் கோகோ பவுடரை சேர்க்கவும். இது, முற்றிலும் சாக்லேட் நிறமாகும் வரை கிளற வேண்டும்.
ஒரு அகலமான தட்டு அல்லது டிரேயில் நெய் தடவி, அதன் மீது கோகோ பவுடர் சேர்க்கப்படாத கலவையை கொட்டி சமன்படுத்தவும். இதன் மீது சாக்லெட் கலவையை போட்டு சமமாக பரப்பவும்.
அதன்பின் நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரிப்பருப்பு, பாதாமை துாவி அலங்கரிக்கவும். இரண்டு மணி நேரம் அப்படியே ஆற விடவும். விரும்பினால் குளிர்ப்பதன பெட்டியிலும் வைக்கலாம்.
அதன்பின் விருப்பமான வடிவில் வெட்டினால், சுவையான இன்ஸ்டென்ட் சாக்லேட் பர்பி தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு கொடுக்கலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும்
- நமது நிருபர் - .

