/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாயை பலாத்காரம் செய்தவருக்கு 'ஆயுள்'
/
தாயை பலாத்காரம் செய்தவருக்கு 'ஆயுள்'
ADDED : டிச 09, 2025 06:36 AM
சிக்கபல்லாபூர்: தன் தாயை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபண்டே தாலுகாவின் கிராமம் ஒன்றில் 38 வயது நபர், தன் தாய், தந்தையுடன் வசிக்கிறார். இந்நபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை, தாக்கி சித்ரவதை செய்தார். இதனால் வெறுப்படைந்த மனைவி, கணவரை விட்டு பிரிந்து, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கடந்த 2024ன், ஆகஸ்ட் 4ம் தேதி இரவு, அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திய நபர், வீட்டுக்கு வந்து தாயை கண்மூடித்தனமாக தாக்கினார். வீட்டின் அருகில் உள்ள காலியிடத்துக்கு இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
மறுநாள் குடிபண்டே போலீஸ் நிலையத்துக்கு சென்று, தாய் நடந்ததை கூறி, புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அந்நபரை கைது செய்தனர். விசாரணையை முடித்து சிக்கபல்லாபூரின் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில், இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு ஆயுள் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி காந்தராஜு நேற்று தீர்ப்பளித்தார்.

