/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் பா.ஜ.,வை துண்டு போடும் 'மாஜி'க்கள்; ஆளாளுக்கு நாட்டாமை செய்வதால் தள்ளாடும் கட்சி
/
கோலார் பா.ஜ.,வை துண்டு போடும் 'மாஜி'க்கள்; ஆளாளுக்கு நாட்டாமை செய்வதால் தள்ளாடும் கட்சி
கோலார் பா.ஜ.,வை துண்டு போடும் 'மாஜி'க்கள்; ஆளாளுக்கு நாட்டாமை செய்வதால் தள்ளாடும் கட்சி
கோலார் பா.ஜ.,வை துண்டு போடும் 'மாஜி'க்கள்; ஆளாளுக்கு நாட்டாமை செய்வதால் தள்ளாடும் கட்சி
ADDED : ஜூன் 04, 2025 12:14 AM
கோலார் -- சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்தல், மே 28ல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், தாலுகா வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிக்கு, தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி மகன் பிரவீன் குமாரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்தும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் பிரவீன் குமார், தன் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், கொத்துார் மஞ்சுநாத் போட்டியின்றி தேர்வானார். இதனால், கோலார் மாவட்ட அரசியல் கலகலத்து உள்ளது. பா.ஜ.,வில் பூசல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் திட்டி தீர்க்கின்றனர்.
கைகோர்ப்பு
முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ்: முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி மகன் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பா.ஜ.,வில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வுக்கு துரோகம் செய்வது, தன் தாய்க்கு துரோகம் செய்தது போன்றதாகும். எதற்கோ ஆசைப்பட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்துடன் சம்பங்கி கைகோர்த்து உள்ளார்
காங்கிரஸ் எம்.எல்.சி., அனில்குமாரின் வலது கரமான பைலாண்டஹள்ளி முரளி, பெங்களூரில் இருந்த பிரவீன் குமாரை அழைத்து வந்து வாபஸ் பெற செய்து உள்ளார். இது பற்றி கட்சியின் மாவட்ட, மாநில தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது
கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம் சக்தி சலபதி: தன் வேட்புமனு வாபஸ் குறித்து பிரவீன் குமார், என்னிடம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கட்சியின் மாநில தலைமைக்கு விரிவான தகவலை தெரிவித்துள்ளேன். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அப்படி இருந்தும் ஏன் வாபஸ் பெற்றார் என்பது எனக்கு தெரியாது.
பாடம் வேண்டாம்
இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கியின் விளக்கம்:
வாய்க்கு வந்தவாறு பேசுகிறவர்களுக்கு எல்லாம், நான் பதில் சொல்ல மாட்டேன். யாரை குஷிப்படுத்த வர்த்துார் பிரகாஷ் என்னை பற்றி இழிவாக பேசுகிறாரோ. முதலில் கட்சி நடவடிக்கைகளில் அவர் ஈடுபடட்டும்; கட்சியின் சித்தாந்தங்களை தெரிந்து கொள்ளட்டும். அதன்பின் எனக்கு அறிவுரை கூறட்டும். நான் அவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
தங்கவயலில் அரசியல் முடிவை எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. எம்.எல்.ஏ., ரூபகலா, வங்கி தலைவர் கோவிந்த கவுடா ஆகியோர் எனது அரசியல் எதிரிகள். கோவிந்த கவுடா தலைவராகிறார் என்று வர்த்துார் பிரகாஷ் கூறுவது என்ன நியாயம்.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோலார் பா.ஜ.,வில், முன்னாள் எம்.பி., முனிசாமி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். தன் கட்டுப்பாட்டில் கோலார் மாவட்ட பா.ஜ.,வை வைத்து கொள்ள வேண்டும் என மும்முரமாக உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் அவருக்கென்று தனி கோஷ்டி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, இவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை. இதனால், ஓட்டுகள் சரிவை கண்டது.
குடும்ப அரசியல்
தங்கவயலில் சம்பங்கியும் தனி ஆவர்த்தனம் செய்வதில் பெரிய நபர். அதனால் தான், தன் தாயை எம்.எல்.ஏ.,வாகவும், மகளை, 'குடா சேர்மனாகவும் ஆக்கினார். சட்டசபை தேர்தலில் சீட் பெற வைத்தார். மகனை, வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்க இயக்குனர் ஆக்கினார்.
இதுனால், கட்சித் தொண்டர்கள் ஒதுங்க துவங்கினர். தனக்காக தான் கட்சி என்ற தனி ரூட் ஏற்படுத்தி உள்ளார். அதனால் தான், கட்சியின் சீனியர்கள் அடையாளம் இல்லாமல் போய் விட்டனர்.
மாவட்ட அரசியலில் சம்பங்கி நடமாட்டம் துவங்கியது. ஆயினும் அவர் எதிர்பார்த்த மாவட்ட தலைவர் பதவி கிடைக்கவில்லை. இந்நிலையில், இவரது மகன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை எதிர்க்காமல் வாபஸ் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பங்கார்பேட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ., நாராயணசாமி, சந்திரா ரெட்டி ஆகியோர் பா.ஜ.,வை, காங்கிரசில் இணைந்து விட்டனர். இன்னும் சிலர் கட்சி தாவும் பட்டியலில் உள்ளனர்.
பங்கார்பேட்டை தொகுதியில், முன்னாள் எம்.பி., கால் பதிக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட முனி, தனது மகன் மகேஷை தயார்படுத்தி வருகிறார். இவர்களும் மாவட்ட பா.ஜ.,வினரும் ஐக்கியமாக இல்லை.
இப்படி கோலார் பா.ஜ., வீட்டுக்கு பல கதவுகள் உள்ளன. ஒருவர் தலைமையின் கட்டுப்பாட்டில் பா.ஜ., இல்லை என்பதையே சமீபகாலத்து செயல்பாடுகள் எடுத்துகாட்டுகின்றன.
- நமது நிருபர் -