/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் சிலையின் மீது போதையில் விழுந்தவர் கைது
/
விநாயகர் சிலையின் மீது போதையில் விழுந்தவர் கைது
ADDED : ஆக 27, 2025 10:44 PM
பொம்மனஹள்ளி : குடிபோதையில் விநாயகர் சிலை மீது விழுந்து, சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பொம்மனஹள்ளியின், கார்வேபாவி பாளையாவில் தனியார் கட்டடம் ஒன்றில், விநாயகர் சதுர்த்திக்காக ஆகஸ்ட் 24ம் தேதி, 2 அடி உயர விநாயகர் சிலையை வைத்திருந்தனர். மறுநாள் சிலையின் இடது காது, இடது கை பகுதிகளில் சேதம் அடைந்திருந்தது.
மர்ம நபர்கள் உள் நோக்கத்துடன் சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் என, சந்தேகித்த அப்பகுதியினர், பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் அங்கு பார்வையிட்டனர். சுற்று பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, குடிபோதையில் கட்டடம் வழியாக சென்ற நபர் ஒருவர், விநாயகர் சிலையை கண்டு, பக்தியுடன் கை கூப்பி வணங்க முற்பட்டார். அப்போது நிலை தடுமாறி, சிலை மீது விழுந்ததால் சிலை சேதமடைந்தது தெரிந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து, சிவு என்பவரை நேற்று முன்தினம் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, குடிபோதையில் சிலை மீது விழுந்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் உள்நோக்கத்துடன், சிலையை சேதப்படுத்தவில்லை என்றாலும், விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இதுபோன்று நடந்ததால், சிவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.