UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 10:54 PM

காட்டன்பேட்டை: வேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் ஆடூரை சேர்ந்தவர்கள் கோகுலகிருஷ்ணா, 24, கங்கா, 22. இவர்கள் இருவருமே, பெங்களூரு ரூரல் மாவட்டம் நெலமங்களாவில் உள்ள, ஹர்ஷா கல்லுாரியில், நர்சிங் முடித்தனர். கங்காவுக்கு, கோகுலகிருஷ்ணா சீனியராக இருந்தார். இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது.
படிப்பு முடிந்த பின், கேரளாவுக்கு சென்ற இவர்கள், வேலை தேடி இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் பெங்களூரு வந்தனர்.
காட்டன்பேட்டையில் உள்ள, ‘ரீஜென்சி லாட்ஜ்’ என்ற ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
சமீப நாட்களாக கங்கா, கோகுலகிருஷ்ணாவிடம் இருந்து விலக துவங்கினார். இதனால் வேறு நபருடன் கங்காவுக்கு தொடர்பிருப்பதாக, கோகுலகிருஷ்ணா சந்தேகித்தார். இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.
லாட்ஜ் அறையில், நேற்று காலை 10:00 மணிக்கு இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த கோகுலகிருஷ்ணா, கத்தியால், கங்காவின் வயிற்றில் குத்தினார். இதை பார்த்த லாட்ஜ் ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த காட்டன்பேட்டை போலீசார், கங்காவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோகுலகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
காந்திநகர் துணை மண்டல டி.சி.பி., லட்சுமி கணேஷ் அளித்த பேட்டி:
கேரளாவை சேர்ந்த கங்காவை, கத்தியால் குத்தி கொன்ற கோகுலகிருஷ்ணாவை கைது செய்துள்ளோம்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து, தீவிர விசாரணை நடத்தப்படும். அதன் பின் தான் உண்மையான காரணம் என்ன என்பது தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
