ரூ.200 பாக்கி வைத்த தகராறில் டீக்கடைக்காரரை கொன்றவர் கைது
ரூ.200 பாக்கி வைத்த தகராறில் டீக்கடைக்காரரை கொன்றவர் கைது
ADDED : மே 17, 2026 11:23 PM

தொட்டபல்லாபூர்: பழைய பாக்கி 200 ரூபாயை தந்தால் தான் டீ கொடுப்பேன் என்று கூறியதால் ஏற்பட்ட தகராறில், டீக்கடைக்காரரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் மாவட்டம் தொட்டபல்லாபூர் தாலுகா அப்பகாரனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் மஞ்சுநாத், 45. இவர் டீக்கடை நடத்தினார்.
இந்த டீக்கடைக்கு தினமும் வரும் முனியப்பா, 48 என்பவர், கடன் சொல்லி டீ குடித்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.
கடந்த 12ம் தேதி டீக்கடைக்கு சென்ற முனியப்பா டீ கேட்ட போது, 'ஏற்கனவே பழைய பாக்கி 200 ரூபாய் உள்ளது. அந்த பணத்தை தந்தால் தான் டீ கொடுப்பேன்' என்று மஞ்சுநாத் கூறினார். கோபம் அடைந்த முனியப்பா, மஞ்சுநாத்தை திட்டியதால் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த முனியப்பா டீக்கடையில் இருந்த மரக்கட்டையை எடுத்து மஞ்சுநாத் தலையில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினார். மண்டை உடைந்து உயிருக்கு போராடிய மஞ்சுநாத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இறந்து விட்டார். தலைமறைவாக இருந்த முனியப்பா நேற்று கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, குடும்ப தகராறில் தாயை கத்தியால் குத்திய வழக்கில் முனியப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்தார். தற்போது கொலை வழக்கில் மீண்டும் சிறைக்கு சென்று விட்டார்.
