கட்டட தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து நண்பர் வீட்டில் கொள்ளையடித்தவர் கைது
கட்டட தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து நண்பர் வீட்டில் கொள்ளையடித்தவர் கைது
ADDED : மே 23, 2026 03:55 AM

சிக்கஜாலா: எப்படி திருட வேண்டும் என, கட்டட தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து, நண்பர் வீட்டில் கொள்ளையடித்த கொத்தனார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு உசனமாரனஹள்ளியில் வசிப்பவர் சுதர்ஷன். இவரது வீட்டிற்குள், கடந்த மாதம் 18ம் தேதி இரவு புகுந்த இரண்டு நபர்கள், சுதர்ஷன், அவரது தந்தை கிருஷ்ணா ஆகியோரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி, வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்கம், 79 கிராம் தங்க நகைகளை கொள்ளை அடித்தனர்.
கிருஷ்ணா கெஞ்சியதால் 50,000 ரூபாயை மட்டும் திரும்ப கொடுத்தனர். 'போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவோம்' என்று மிரட்டி விட்டு, இருவரும் தப்பி சென்றனர்.
ஆனாலும் கொள்ளை சம்பவம் குறித்து, சிக்கஜாலா போலீஸ் நிலையத்தில், சுதர்ஷன் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், மொபைல் போன் டவர் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.
இந்த வழக்கில் கட்டட தொழிலாளிகளான அர்பாஸ், 22, ஜிப்ரான், 23, ஆகியோர் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி கொத்தனார் வேலை செய்யும் குருபிரசாத், 35, என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் இருந்து, 11.50 லட்சம் ரூபாய், 47 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கைதான குருபிரசாத்தும், சுதர்ஷனும் நண்பர்கள் ஆவர். சுதர்ஷன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டில் குருபிரசாத் கொத்தனாராக வேலை செய்தார். நண்பர் என்பதால், குருபிரசாத்திற்கு சுதர்ஷன் குறைந்த சம்பளமே கொடுத்துள்ளார்.
மேலும் வேலை சரியாக செய்யவில்லை என்று சுதர்ஷனும், கிருஷ்ணாவும் அடிக்கடி குருபிரசாத்திடம் குறை சொல்லி வந்து உள்ளனர்.
இதனால் வெறுப்பு அடைந்த குருபிரசாத், சுதர்ஷன் வீட்டில் திருட முடிவு செய்தார்.
தனக்கு கீழ் கட்டட தொழிலாளிகளாக வேலை செய்த அர்பாஸ், ஜிப்ரானுக்கு திருடுவது எப்படி என்று பயிற்சி அளித்து, சுதர்ஷன் வீட்டிற்கு அவர் அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
