UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 11:22 PM
தாவணகெரே: நிறைமாத மனைவியை தாக்கி, அவரது இறப்புக்கு காரணமான கணவர், பச்சிளம் குழந்தையுடன் தப்பியோடினார்.
தாவணகெரே நகரின், பேதுாரு கிராமத்தை சேர்ந்தவர் நிங்கராஜ், 30. இவர் சில ஆண்டுகளுக்கு முன், பசம்மா, 25, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். பசம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சமீப நாட்களாக தம்பதிக்கிடையே, குடும்ப பிரச்னையால் அவ்வப்போது சண்டை நடந்தது.
கடந்த வாரம், மனைவியுடன் வாக்குவாதம் செய்து, அவரை கண் மூடித்தனமாக தாக்கினார். இதில் பசம்மாவின் தலையில் பலத்த காயமடைந்தார். இதை கண்ட அப்பகுதியினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு நாட்களுக்கு முன் அவருக்கு பிரசவமாகி, ஆண் குழந்தை பிறந்தது.
தலையில் அடிபட்டதால், அவரது நிலை மோசமானது. ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை பசம்மா உயிரிழந்தார்.
மனைவியின் உடலை, வாகனத்தில் வைத்து கொண்டு ஊருக்கு புறப்பட்ட நிங்கராஜ், வழியில் வாகனத்தை நிறுத்தி மனைவியின் உடலை விட்டு, குழந்தையை எடுத்து கொண்டு தப்பிவிட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசாரால், பசம்மாவின் உடல், தாவணகெரேவின், இந்திரா நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு, கொண்டு செல்லப்பட்டது. போலீசாரும் குழந்தையுடன் தப்பியோடிய நிங்கராஜை, தேடி வருகின்றனர்.
