'பிட்காயின் ' மோசடி வழக்கில் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு ஜாமின்
'பிட்காயின் ' மோசடி வழக்கில் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு ஜாமின்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 11:22 PM
பெங்களூரு: பிட்காயின் மோசடி வழக்கில் கைதான பிரபல ஹேக்கர், ஸ்ரீகிருஷ்ணாவுக்கு, உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
பெங்களூரின் ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 30. அரசு நிறுவனங்களில் இணையதளங்களை முடக்கி பல கோடி ரூபாயை சுருட்டியதுடன், தனியார் கேமிங் நிறுவனங்களின் இணையதள பக்கத்தை முடக்கி, பிட்காயின்களை திருடினார்.
சட்டவிரோத பணபரிமாற்றத்திலும் ஈடுபட்டதால் ஸ்ரீகிருஷ்ணா, அவரது நண்பர்கள் ராபின் கன்டேல்வால், பிரதீக், சுனிஷ் ஹெக்டே உட்பட ஆறு பேரை, ஈ.டி., எனும் அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாமின் கேட்டு ஸ்ரீகிருஷ்ணாவும், ராபின் கன்டேல்வாலும், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இம்மனுவை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி விசாரித்தார்.
மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், மனுதாரர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய போதெல்லாம், தவறாமல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதற்கு, அமலாக்கத்துறை வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சியங்களை அழித்து விடுவர். மனுதாரர்கள் அரசு, தனியார் நிறுவனங்களின் இணையதள பக்கங்களை, 'ஹேக்' செய்து அதில் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர் என கூறினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்று கொண்டு, இருவருக்கும் ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
