கப்பன் பார்க்கில் நாளை மாம்பழ கண்காட்சி துவக்கம்
கப்பன் பார்க்கில் நாளை மாம்பழ கண்காட்சி துவக்கம்
ADDED : மே 06, 2026 11:50 PM
பெங்களூரு: கே.எஸ்.எம்.டி.எம்.சி.எல்-., செய்துள்ள இந்த ஆண்டின் முதல் மாம்பழ மற்றும் பலாப்பழக் கண்காட்சி நாளை கப்பன் பூங்காவில் துவங்குகிறது.
கே.எஸ்.எம்.டி.எம்.சி.எல்-., எனும் கர்நாடக மாநில மாம்பழ மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் கழக தலைவர் பி.சி.முட்டுகங்காதர் கூறியதாவது:
எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட்பீல்ட், பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லுாரி மைதானம் உள்ளிட்ட பெங்களூரு முழுதும் உள்ள விளையாட்டு மைதானங்களில் சிறு திருவிழாக்களை நடத்த வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது.
இடங்களையும், தேதிகளையும் இறுதி செய்வதற்காக பெருநகர பெங்களூரு ஆணையத்துடன் பேச்சு நடத்தப்படுகிறது. கார்பைடு இல்லாமல் இயற்கையாக பழுத்த நல்ல தரமான மாம்பழங்களை நுகர்வோர் பெறுவதையும் உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.
பல விவசாயிகள், இப்போது தங்கள் பழங்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்காகத் தங்களுடைய சொந்த இணையதளங்களையும், 'வாட்ஸாப்' அடிப்படையிலான விற்பனையைத் துவங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை கப்பன் பூங்காவில் துவங்கும் மாம்பழம், பலா கண்காட்சி, வரும் 17ம் தேதி வரை நடைபெறும். மாம்பழங்களுக்கு 50 கடைகளும், பலாப்பழங்களுக்கு ஏழு கடைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த, 2023ல் புவிசார் குறியீடு பெற்ற பிறகு பிரபலமடைந்த, உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த கரி இஷாத் ரக மாம்பழமும், கப்பன் பூங்காவில் நடைபெறும் 10 நாள் மாம்பழக் கண்காட்சியில் கிடைக்கும்.
இக்கண்காட்சியில், பாதாமி, மல்லிகா, செந்துரா, ரசபுரி உள்ளிட்ட பிற ரகங்களும், ருத்ராட்சி, சிவராத்திரி, ஏகாதசி, துாபாகெரே லால்பாக் மதுரா உள்ளிட்ட பலா ரகங்களும் விற்கப்படும். ஊறுகாய்க்கு ஏற்ற மாங்காய்களும் விற்பனைக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
