UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:52 PM

பெலகாவி: பெலகாவியின் மஹாந்தேஷ் நகரில் வசித்தவர்துருவா சந்தோஷ் கார்ஜனகி, 19. தனியார் ஐ.டி.ஐ., கல்லுாரியில் படித்து வந்தார். பகல் நேரத்தில் கல்லுாரிக்கு செல்வார். குடும்ப நிர்வகிப்புக்காக, இரவில் பணிக்கு சென்று பணம் சம்பாதிப்பார்.
கல்லுாரியில் நேற்று முன்தினம் தேர்வு இருந்தது. எனவே தன் உறவினரின் பைக்கில், தேர்வுஎழுத சென்றார். தேர்வு முடிந்த பின் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.
பெலகாவியின், காந்தி நகர் அருகில் உள்ள புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா கயிறு, மாணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கியதில், கழுத்து அறுபட்டு பைக் மீதே உயிரிழந்தார்.
பட்டம் விட பயன்படுத்தும் கயிறுக்கு, கண்ணாடி துாள் தடவிய மாஞ்சா கயிறு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. சாலையில் வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோரின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துவதால், கடந்த 2017ல் கர்நாடக அரசு மாஞ்சா கயிறு தயாரிப்பது, விற்பதை, பயன்படுத்துவதை தடை செய்தது. ஆனால், இப்போதும் அபாயமான மாஞ்சா கயிறு பயன்படுத்துவது நிற்கவில்லை.
பைக்கில் செல்லும் போது, கண்ணுக்கு தெரியாத இந்த கயிறு சிக்கி, கழுத்து அறுபட்டு பலர் இறந்த சம்பவங்கள், பெங்களூரு, கதக் நகரில் நடந்தது. இப்போது பெலகாவியில் நடந்துள்ளது.
