ADDED : டிச 26, 2025 06:42 AM

பொதுவாக, 30 வயதை தாண்டி விட்டாலே பெண்கள் கை வலி, கால் வலி, மூட்டு வலி என கூறுவதை கேட்கலாம். திருமணமாகி, ஒரு குழந்தை பிறந்த பின் வாழ்க்கை அவ்வளவு தான் என நினைக்கும் பெண்களே அதிகம். ஆனால், சிலர் மட்டுமே, வயதானாலும் சாதனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் மஞ்சம்மாவும் ஒருவர்.
இன்றைய கால கட்டத்தில் பலரும் ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் தடகள வீராங்கனை மஞ்சம்மா, 72, மாறுபட்டவர். ஷிவமொக்காவை சேர்ந்த இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தான், ஓட்டப்பந்தய வீராங்கனையாக, விளையாட்டு உலகில் நுழைந்தார். இதுவரை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 110 பதக்கங்கள் வென்றுள்ளார்.
மஞ்சம்மாவின் கணவர் தேவராஜ்; குடகு மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், கர்நாடக ஹேண்ட்லுாம் மற்றும் உல்லன் சொசைட்டியில் பணியாற்றினார். மஞ்சம்மா, லேடி ஹெல்த் விசிட்டர் மற்றும் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி 2013ல் ஓய்வு பெற்றார். இதே ஆண்டில், அவரது கணவர் தேவராஜ் காலமானார். கணவரின் மறைவால் மஞ்சம்மா மன அழுத்தத்துக்கு ஆளானார். அதிலிருந்து விடுபட, 2018ம் ஆண்டில் அதாவது தன், 65வது வயதில், ஜாகிங் துவக்கினார். அதன்பின் மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.
விளையாட்டில் ஈடுபட்டதால், அவரது மனமும், உடலும் ஆரோக்கியமடைந்தது. தினமும் யோகா, நடை பயிற்சி, தியானம், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுகிறார். இப்போதும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கிறார். நாசிக், ஹைதராபாத், கோவா, புனே, கொச்சியில் நடந்த விளையாட்டு போட்டிகளில், கர்நாடகா சார்பில் பங்கேற்றார். ப்ரூனியில் நடந்த சர்வதேச அளவிலான போட்டிகள், இலங்கை மாஸ்டர் அத்லெடிக்ஸ் இண்டர்நேஷனல், மங்களூரில் நடந்த தென்னா சிய போட்டி, உடுப்பியில் நடந்த தென்னக போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தின் சென்னையில் நடந்த, 23வது ஏஷியன் மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் ஓட்டத்தில் மஞ்சம்மா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில், 110 பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலும், தன்னை எறும்பு போன்று சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரே வெட்கப்படும் அளவுக்கு, விளையாட்டில் சாதிக்கிறார். வயது என்பது வெறும் எண்ணிக்கை தான். சாதனை செய்ய வயதோ, முதுமையோ தடையல்ல. மன உறுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் என, மஞ்சம்மா நிரூபித்துள்ளார்.
மஞ்சம்மா கூறியதாவது
எனது, 27 வயது மகள், பெங்களூரில் டாக்டராக உள்ளார். என் சாதனையின் பின்னணியில், மகளின் உழைப்பும் உள்ளது; அவர் எனக்கு ஊக்கமளிக்கிறார். விளையாட்டு திறனை, நண்பர்களும் பாராட்டுகின்றனர். மைசூரு மற்றும் மங்களூரின் விளையாட்டு சங்கங்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளுக்கு, என்னை அழைக்கின்றனர்.
விளையாட்டு பயிற்சி, உடல் ஆரோக்கியத்துக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது. மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள், தங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். வாழ்க்கையில் யோகா, நடை பயிற்சி, தியானம், விளையாட்டுகள் எல்லாம் இன்றியமையாதவை. 2018ல் நடந்த தடகள போட்டியில் பங்கேற்று, முதல் முறையாக பதக்கம் வென்றேன். இதுவே விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது திறமையை வெளிப்படுத்த, வயது கட்டுப்பாடு எதுவும் இல்லை. தன்னம்பிக்கையே முக்கியம். அது, நம் சாதனைக்கு உதவும். மனம் இருந்தால் எதையும் செய்யலாம். இளம் தலைமுறையினர் தங்களின் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை பழக்கமாக்குவது நல்லது. ஜாகிங், யோகா பயிற்சியுடன் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

