/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஆகஸ்டில் சேவை துவங்க வாய்ப்பு
/
மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஆகஸ்டில் சேவை துவங்க வாய்ப்பு
மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஆகஸ்டில் சேவை துவங்க வாய்ப்பு
மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஆகஸ்டில் சேவை துவங்க வாய்ப்பு
ADDED : ஜூலை 04, 2025 11:16 PM
பெங்களூரு: ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரின் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை 19.5 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது, மஞ்சள் நிற வழித்தடம் எனப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 16 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பாதையில் இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்தன.
பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. இப்பாதையில் பல சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இறுதிகட்ட சோதனையை மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர், வரும் 15ம் தேதி மேற்கொள்கிறார்.
இவர் ஒப்புதல் அளித்த பின், இப்பாதையில் வர்த்தக ரீதியிலான ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படலாம்.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை எப்போது துவங்குமோ என, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மஞ்சள் வழித்தடத்தில் பணிகள் முடிந்துவிட்டன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முதலில் மூன்று ரயில்கள், 25 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். நான்காவது ரயில், ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் இயக்கப்படலாம்.
அடுத்த ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் முழு அளவிலான ரயில் போக்குவரத்து இருக்கும். இந்த வழித்தட துவக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கும் திட்டமும் உள்ளது.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்து துவக்கப்பட்ட பின், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.