UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 11:28 PM
பெங்களூரு: பால் விலையை எட்டு ரூபாய் உயர்த்தியதால், பொது மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. திடீரென பால் விலையை, எட்டு ரூபாய் உயர்த்தியதால், மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தொடர்ந்து விலை உயர்த்தினால், ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என, பலரும் ஊடகங்கள் மூலமாக, அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘வாக்குறுதி திட்டங்களை தாருங்கள்’ என, மக்கள் கேட்கவில்லை. ஓட்டுகள் பெறுவதற்காக காங்கிரஸ், தன் விருப்பப்படி திட்டங்களை அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின், திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறுகிறது.
சித்தராமையா முதல்வராக இருந்த போது, எப்படியோ சமாளித்தார். முதல்வர் மாறியதும் சூழ்நிலையும் மாறியது.
கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் சிவகுமார் பேசும் போது, ‘கருவூலம் காலியாக உள்ளது. பாக்கெட்டில் பணம் இருந்தால் தானே, கொடுக்க முடியும்’ என, கூறியதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலையை அம்பலப்படுத்தியுள்ளார். இதை கேட்டு மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
வாக்குறுதி திட்டங்களின் பெயரில், குடிநீர் கட்டணம், பால், தயிர், பள்ளி கல்வி கட்டணம் என, அத்தியாவசிய தேவைகளின் கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்துவது சரியல்ல.
சில மாதங்களாக கிரஹலட்சுமி பணமும் வரவில்லை. மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகையும் கிடைக்கவில்லை.
பசுக்களின் தீவனம் விலை உயர்ந்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் நஷ்டமடைவதாக கூறி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், அரசுக்கு நெருக்கடி கொடுத்து பால் விலையை உயர்த்தியுள்ளன.
தீவனத்தின் விலையை குறைக்க, நடவடிக்கை எடுக்காத அரசு, பொது மக்களின் தலையில் சுமையை ஏற்றி வைத்து விட்டு, கை கழுவுகிறது என, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு சுமை ஏற்படுத்தாமல், அரசை நடத்த வேண்டியது தானே என, கேள்வி கேட்கின்றனர்.
