/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரு கோடி லிட்டரை தாண்டியது பால் உற்பத்தி
/
ஒரு கோடி லிட்டரை தாண்டியது பால் உற்பத்தி
ADDED : ஜூன் 02, 2025 11:09 PM

பெங்களூரு: பால் உற்பத்தியில் கே.எம்.எப்., சாதனை செய்துள்ளது. 1 கோடி லிட்டரை எட்டியுள்ளது.
இதுகுறித்து, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் கே.எம்.எப்., கட்டுப்பாட்டில், 16 மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 15,840 பால் பண்ணைகள் உள்ளன. இவற்றுக்கு 26.89 லட்சம் விவசாயிகள் பால் சப்ளை செய்கின்றனர்.
கே.எம்.எப்.,பில் ஆண்டுக்கு ஆண்டு பால் உற்பத்தி அதிகரிக்கிறது. இதை விற்பனை செய்வது, கே.எம்.எப்.,புக்கு பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக கோடை காலத்தில், பசுக்களுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்படும். இதன் விளைவாக பால் உற்பத்தி குறையும். 80 லட்சம் லிட்டர் வரை, பால் உற்பத்தி இருக்கும். 2024ல் கோடை காலத்திலும் பால் உற்பத்தி, 89 லட்சம் லிட்டராக இருந்தது.
நடப்பாண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இருந்தே, மாநிலத்தின் பல இடங்களில் மழை துவங்கியது. சில மாவட்டங்களில் வழக்கத்தை விட, அதிகமான மழை பெய்தது. இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்தது. பால் உற்பத்தியும், 12 சதவீதம் அதிகரித்தது. 1.02 கோடி லிட்டரை தாண்டியுள்ளது.
வரும் நாட்களில் 1.25 கோடி லிட்டரை எட்டும் என, எதிர்பார்க்கிறோம். நடப்பாண்டு கோடை மழை திருப்திகரமாக இருந்தது. சூழ்நிலை குளிர்ச்சியாக இருப்பதால், பசுக்கள் ஆரோக்கியமாக உள்ளன. 75 லட்சம் லிட்டர் பால், வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. மீதமாகும் பால் மூலம் பொடி, தயிர் மற்றும் நந்தினி உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.