மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் நிறைவு: பள்ளி, கல்லுாரி வீரர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு
மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் நிறைவு: பள்ளி, கல்லுாரி வீரர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு
UPDATED : நவ 22, 2026 04:46 AM
ADDED : நவ 21, 2026 11:52 PM

பெங்களூரு: ஐந்தாவது மினி கர்நாடக விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில், ''விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் வருகை பதிவேட்டில், 25 சதவீதம் சலுகை; தேர்வுகளில் ஐந்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்,'' என, கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் ஐந்தாவது மினி கர்நாடக விளையாட்டு போட்டிகள், கடந்த 14ம் தேதி துவங்கின. கால்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து உள்ளிட்ட 27 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில், மாநிலத்தின் பல பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வீரர்கள் பலரும் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
நிறைவு விழா
இப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதற்காக, கன்டீரவா மைதானத்தில் நேற்று நடந்த நிறைவு விழாவில், துணை முதல்வர் பரமேஸ்வர், வன அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவிந்தராஜ் பேசியதாவது:
அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு காங்கிரஸ் ஆட்சியில் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. பொது அரசு பணிகளில் 2 சதவீதமும், வனம், போலீஸ் துறைகளில் 3 சதவீதமும் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
பெற்றோருக்கு நன்றி
இம்முறை நடந்த போட்டியில், கிராமங்களில் வசிக்கும் சிறுமியர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக பெண் குழந்தைகளை வெளியூருக்கு அனுப்பும் பெற்றோர்கள் குறைவாகவே இருக்கின்றனர். குழந்தைகளை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும்படி ஊக்குவித்த பெற்றோருக்கு நன்றி.
இளம் வீரர்கள் விளையாட்டிற்கு அளிக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை படிப்பிலும் செலுத்துவது கட்டாயமாகும்.
விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் வருகை பதிவேட்டில் 25 சதவீதம் சலுகை, தேர்வுகளில் ஐந்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும். திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் வாய்ப்புகளை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதை தடுக்கவே, இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
* அவசியம்
சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பது அவசியம். குழந்தைகளை 'ஸ்மார்ட் போன்' பயன்பாட்டிலிருந்து விலக்கி வைத்து, விளையாட்டுகளில் ஈடுபட பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். மாநிலத்தில் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளை துவங்குவதற்கான திட்டம் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
பரமேஸ்வர், துணை முதல்வர்.
