ADDED : ஜூலை 03, 2026 11:17 PM

பெங்களூரு: பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றும் கிருஷ்ணபைரே கவுடா, பெங்களூரை, 'பிராண்ட் பெங்களூரு' ஆக மாற்றும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தினமும் ஜி.பி.ஏ., அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்குவதுடன், சரியாக பணி செய்யாதவர்களை கண்டித்தும் வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணபைரே கவுடா நகர்வலம் சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில்க் போர்டின் லவுரி சந்திப்பில் இருந்து சில்க் போர்டு சந்திப்பு வரை, வெளிவட்ட சாலையின் பணிகளை அப்போது அவர் ஆய்வு செய்தார்.
சில்க் போர்டில் இருந்து பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் வரை 17.1 கி.மீ., நீளமுள்ள சாலையை உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பில் மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர், 'நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள்; நடைபாதையில் மக்கள் தலைக்கு மேல் தொங்கும் மின்வயர்களை அகற்ற வேண்டும்; இணைப்பு சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதே நேரம் இணைப்பு சாலையில் உள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தார். 'இதுபோன்ற சாலை பள்ளங்களால் தான் போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது. சாலைகளை சீரமைப்பது தான் முன்னுரிமை' என்றார்.
அப்போது அதிகாரிகள் தவறான தகவல் கொடுக்க முயன்றதால் கோபம் அடைந்த அவர், 'பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்' என்று கண்டித்தார்.
