எஸ்.ஐ.ஆர்., பணிகளில் பல்வேறு முறைகேடுகள்; காங்., மீது எதிர்க்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் பல்வேறு முறைகேடுகள்; காங்., மீது எதிர்க்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 03, 2026 11:18 PM

பெங்களூரு: வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும், எஸ்.ஐ.ஆர்., பணிகளில், காங்கிரஸ் அரசு பல்வேறு முறைகேடுகள் செய்வதாகவும், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த ஜூன் 30ம் தேதி, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும், பி.எல்.ஓ., எனும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளாக காங்கிரஸ் கட்சியினர் நியமிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக, நேற்று பெங்களூரில் உள்ள, ம.ஜ.த., தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி, யஷ்வந்த்பூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்த வீடியோவை காண்பித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
யஷ்வந்த்பூர் தொகுதியில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணிகளில், எம்.எல்.ஏ., சோமசேகர் படங்கள் பொறித்த நோட்டுகளை பி.எல்.ஓ.,க்கள் பயன்படுத்தி உள்ளனர்.
ராம்நகரில் விதிமுறைகளை மீறி, ஒரே இடத்தில் கும்பலாக, 50க்கும் மேற்பட்டோரிடம் எஸ்.ஐ.ஆர்., பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அயோத்தி ராமர் கோவில் முறைகேடுகள் குறித்து பேசும் காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், எஸ்.ஐ.ஆர்., தொடர்பான குற்றச்சாட்டுகளின் மீது மவுனம் சாதிக்கிறார்.
மாநில தேர்தல் கமிஷனர் அன்புகுமாரை நேரில் சந்தித்து, ஏராளமான கேள்விகள் கேட்க உள்ளேன். எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து, மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அன்புகுமார் கூறுகையில், ''எஸ்.ஐ.ஆர்., பணிகள் வீடு வீடாக சென்று மட்டுமே நடத்தப்பட வேண்டும். வழிபாட்டு தலங்களில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடத்தக்கூடாது. மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
