ADDED : செப் 30, 2026 11:09 PM

பெங்களூரு: பெங்களூரின் பல இடங்களில் உள்ள சாலைகளை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, அதிகாரிகளுடன் வேனில் சென்று நேற்று ஆய்வு செய்தார். பணியில் அலட்சியம் செய்த அதிகாரிகளுக்கு அப்போது அவர், 'டோஸ்' விட்டார்.
பெங்களூரு சர்ஜாபூர், தொம்மசந்திரா, குஞ்சூர், வர்த்துார், மஹாதேவபுரா பகுதிகளில் உள்ள சாலைகளை பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நேற்று ஆய்வு செய்தார். பெரிய வேனில் மாநகராட்சி, பெஸ்காம், கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு அதிகாரிகளும், அமைச்சருடன் சென்றனர்.
பல இடங்களில் மோசமாக இருந்த சாலைகள், குப்பைகள் குவிந்த இடங்கள், ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட இடங்களை பார்த்து, அமைச்சர் ஆத்திரம் அடைந்தார். அதிகாரிகளை திட்டினார்.
'அய்யோ... உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். தயவுசெய்து வேலை செய்யுங்கள். ஏதாவது ஒரு கேள்வி கேட்டால், 100 காரணங்கள் கூறுகிறீர்கள். உங்களுக்கும் சேர்த்து, நான் வேலை செய்ய வேண்டும் போலிருக்கிறதே' என கவுடா கோபமாக கூறினார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:
நீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யப்படும். சாலைகள் அமைக்கப்படும் போது, எதிர்கால திட்டங்களை கருதுவது முக்கியம்.
நிலுவையில் உள்ள சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்படும். நீர் குழாய் அமைக்கும் பணிகளை வேகப்படுத்தவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
