ADDED : ஜன 10, 2026 06:45 AM
உடுப்பி: பள்ளி முடிந்த பின் விளையாட சென்று காணாமல் போன, 9 வயது சிறுவனை, பாறைக்கு கீழே போலீசார் கண்டுபிடித்தனர் .
உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா குஜ்ஜாடி பென்னரே கிராமத்தில், தன் பெற்றோருடன் வசிக்கும் 9 வயது சிறுவன், அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற சிறுவன் மாலையில் வீடு திரும்பினான்.
அதன்பின் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறி சென்றவன், இரவாகியும் வீடு திரும்பவில்லை. பீதியடைந்த பெற்றோர் வீட்டின் சுற்றுப்பகுதிகளில் தேடியும், சிறுவனை காணவில்லை. எனவே, கங்கொள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர் . போலீசாரும் கிராமத்துக்கு வந்து சிறுவனை தேட துவங்கினர்.
வீட்டிற்கு அருகேயுள்ள பாறைக்கு கீழே, சிறுவன் அமர்ந்திருப்பதை அதிகாலை, 12:40 மணியளவில் போலீசார் கண்டு பிடித்தனர். அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விளையாடும் போது கீழே விழுந்ததில், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.
வீட்டுக்கு சென்றால் பெற்றோர் திட்டுவர் என்ற பயத்தால், வீட்டுக்கு செல்லாமல் பாறையின் அடியில் மறைந்திருந்ததாக சிறுவன் கூறினான்.

