/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., ஆதரவாளர் சரமாரி வெட்டி கொலை
/
எம்.எல்.ஏ., ஆதரவாளர் சரமாரி வெட்டி கொலை
ADDED : மார் 24, 2025 04:51 AM

சோழதேவனஹள்ளி: மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவின் ஆதரவாளரான, தொழில் அதிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலையாளிகளை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ராம்நகரின் மாகடியை சேர்ந்தவர் லோக்நாத் சிங், 37; தொழிலதிபர். ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவின் ஆதரவாளராக இருந்தார்.
பெங்களூரு சோழதேவனஹள்ளி அருகே பி.ஜி.எஸ்., லே - அவுட்டில் லோக்நாத் சிங் புதிதாக கட்டடம் கட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கட்டட தொழிலாளிகள் சென்று விட்டனர். கட்டடத்தின் அருகே வைத்து லோக்நாத் சிங் உட்பட ஆறு பேர் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.
லோக்நாத் சிங்கை, மற்ற ஐந்து பேரும் சேர்ந்து தாக்கினர். காருக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றி கொள்ள கட்டடத்திற்குள் ஓடினார். ஆனாலும் துரத்தி சென்று கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கட்டடத்திற்குள் சென்று பார்த்தனர். லோக்நாத் சிங் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும், வடக்கு மண்டல டி.சி.பி., சைதுல் அதவத், சோழதேவனஹள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
லோக்நாத் சிங்கை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. பெண் விவகாரம் அல்லது தொழில் போட்டியில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலையான லோக்நாத் சிங்கிற்கு இம்மாத இறுதியில், திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.