எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் ரூ.23.35 கோடி சொத்து முடக்கம்
எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியின் ரூ.23.35 கோடி சொத்து முடக்கம்
UPDATED : அக் 28, 2026 03:31 AM
ADDED : அக் 28, 2026 12:14 AM

பெங்களூரு: சட்டவிரோத ஆன்லைன் பந்தய செயலிகள் வாயிலாக பணம் சம்பாதித்த வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு சொந்தமான, 23.35 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 51. இவர் கோவாவில் சூதாட்ட விடுதிகளை நடத்துகிறார். அவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பல சட்டவிரோத ஆன்லைன் செயலிகளின் வாயிலாக சூதாட்டங்கள் நடத்தி பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதில் கிடைத்த 2,300 கோடி ரூபாய் பணத்தை, ஹவாலா மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதைக் கண்டுபிடித்த அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரேந்திர பப்பியை கைது செய்து சிறையில் அடைத்தது. நான்கு மாதங்களுக்குப் பின், ஜாமினில் வெளியே வந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் வீரேந்திர பப்பிக்கு சொந்தமான, 177 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக வீரேந்திர பப்பிக்கு சொந்தமான மேலும் 23.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.
