/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வருடன் எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
/
துணை முதல்வருடன் எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:19 PM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பல்லாரி காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், ஆணையத்தின் தலைவரான எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல், துணை முதல்வர் சிவகுமாரை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக அரசின் பழங்குடியினர் நலத் துறைக்கு உட்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கு, தற்போது சூடுபிடித்துள்ளது. முறைகேடு பற்றி விசாரிக்கும் அமலாக்கத்துறை, பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராம், எம்.எல்.ஏ.,க்கள் நாகேந்திரா, பரத் ரெட்டி, கணேஷ், சீனிவாஸ் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம் 14 மணி நேரம், சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்துச் சென்றது.
இந்த வழக்கில் ராய்ச்சூர் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவருமான பசனகவுடா தத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு முன், இரண்டு முறை விசாரணைக்கு தத்தல் ஆஜரானார். தற்போது அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாக நடப்பது, தத்தலுக்கு பீதியை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, துணை முதல்வர் சிவகுமார் வீட்டிற்கு நேற்று காலை, தத்தல் சென்றார். இருவரும் அரைமணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். பின், வெளியே வந்த தத்தல் ஊடகத்தினரிடம் எதுவும் பேசாமல், காரில் புறப்பட்டுச் சென்றார்.
இருவரும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய வழக்கு குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தத்தல் சென்ற பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பீமண்ணா நாயக், யஷ்வந்த்ராய கவுடா பாட்டீலும், சிவகுமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.