‘பாம்பே டேஸ்’ புத்தகத்தை வெளியிட எம்.எல்.சி., மறுப்பு
‘பாம்பே டேஸ்’ புத்தகத்தை வெளியிட எம்.எல்.சி., மறுப்பு
UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 10:57 PM

மைசூரு: ‘‘தான் எழுதிய, ‘பாம்பே டேஸ்’ புத்தகம் இறுதி கட்டத்தில் உள்ளது. ஆனால் வெளியிட மாட்டேன்,’’ என, பா.ஜ., – எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அரசியல் ரகசியங்கள் அடங்கிய, ‘பாம்பே டேஸ்’ புத்தகம் இறுதி கட்டத்தில் உள்ளது. கடந்த, 2019ல், கூட்டணி அரசு கவிழ்ந்தது, ‘ஆப்பரேஷன் தாமரை’ போன்ற உண்மை சம்பவங்களை விவரித்துள்ளேன். இப்புத்தகத்தை, எழுதி முடித்துள்ளேன்.
ஆனால் அதை வெளியிட மாட்டேன். அந்த புத்தகத்தை வெளியிட்டால், அரசியல் குறித்து, மக்களிடம் அருவறுப்பு அதிகரிக்கும். அதில் எனக்கு விருப்பம் இல்லை.
சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் ஆசிரியர்கள், பட்டதாரிகள் மட்டுமே, ஓட்டு போட்டனர். இதில் வெற்றி பெற்றவுடன், விஜயேந்திரா, அசோக், குமாரசாமி, ‘2028ல் நாங்களே ஆட்சிக்கு வருவோம்’ என, கூப்பாடு போடுகின்றனர்.
ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, பிரதிநிதியாக உள்ள வாரணாசியிலேயே, பா.ஜ., தோற்றது. அங்கு சமாஜ்வாதி வெற்றி பெற்றதை, இந்த தலைவர்கள் மறக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
