ADDED : மே 09, 2026 02:20 AM

சாம்ராஜ்நகர்: முடி திருத்தும் கடைக்கு வந்த குரங்கு, தான் முடி திருத்தி கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
சாம்ராஜ்நகரின் சந்தேமரஹள்ளி கிராமத்தில் தேவராஜ் என்பவர், முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக, இவரது கடை முன், ஒரு குரங்கு வருவது வழக்கமாக இருந்தது.
வழக்கமாக, கடை அருகே வந்து பார்த்து விட்டு சென்று விடும். ஆனால் நேற்று காலை அங்கு வந்த குரங்கு, திடீரென கடைக்குள் புகுந்தது. இருக்கையில் ஏறி அமர்ந்து, கண்ணாடியை பார்த்தது. அதில் தெரிந்த தன் உருவத்தை பார்த்து, விசித்திரமாக சேஷ்டைகள் செய்தது.
கடை உரிமையாளர் தேவராஜ், முதலில் குரங்கை பார்த்து பயந்தார்; விரட்ட முயற்சித்தார். ஆனால், அங்கிருந்து செல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், குரங்கின் தலையை தடவினார்.
கத்திரி மற்றும் சீப்பை எடுத்து, அதன் தலைமுடியை திருத்துவது போல, வேடிக்கை செய்தார். முடியை திருத்திக் கொள்ள விரும்பி, தன் தலையை குரங்கு சாய்த்தது.
அதன் பின், அதன் தலைமுடியை கத்திரி, சீப்பு வைத்து தேவராஜ் வெட்டி திருத்தினார். அப்போதும், குரங்கு அமைதியாக அமர்ந்திருந்தது. பின், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், அங்கிருந்து சென்றது.
இதை பார்த்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்தனர். தங்களின் மொபைல் போனில், போட்டோ, வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
