UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:06 PM

பெங்களூரு: தீபாவளியை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களுக்கு, 2,600 கூடுதல் பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
வார இறுதி விடுமுறை, தீபாவளி பண்டிகை என்பதால், வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணியரின் வசதிக்காக, பெங்களூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 2,600 பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது.
நவ., 6 முதல் 8 வரை
கூடுதல் பஸ்கள் நவம்பர் 6 முதல், 8ம் தேதி வரை இயக்கப்படும். பண்டிகை முடிந்து திரும்புவோருக்காக, 10 மற்றும் 11ம் தேதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
பெங்களூரில் இருந்து பெலகாவி, மங்களூரு, உடுப்பி, மைசூரு, ஷிவமொக்கா, ஹூப்பள்ளி உட்பட கர்நாடகாவின் முக்கிய நகரங்கள், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள், பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையம், மைசூரு சாலை சாட்டிலைட் பஸ் நிலையம், சாந்தி நகரின் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து இயங்கும்.
பயணியரின் வசதிக்காக பி.எம்.டி.சி.,யின் விஜயநகர் பஸ் நிலையம், யஷ்வந்த்பூர், ஜெயநகர், மல்லேஸ்வரம் 18வது கிராஸ் பஸ் நிலையம், பசவேஸ்வரா நகரின் சாரதா பஸ் நிலையம், எலக்ட்ரானிக் சிட்டி, அத்திப்பள்ளி, டின் பேக்டரி என, பெங்களூரின் பல இடங்களில் இருந்தும், கூடுதல் பஸ்கள் புறப்படும்.
மங்களூரு, உடுப்பி, குந்தாபுரா, புத்துார், தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, ஷிவமொக்கா, தாவணகெரே, ஹாசன், ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, சிர்சி, கார்வார், கோகர்ணா, ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பால், யாதகிரி, பீதர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மைசூரு, ஹுன்சூர், பிரியாபட்டணா, விராஜ்பேட், குஷால்நகர், மடிகேரி வழித்தடங்களின் கூடுதல் பஸ்கள் மைசூரு சாலையின் சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தமிழக பஸ்கள்
தமிழகத்தின் சென்னை, கோவை, கும்பகோணம், மதுரை, திருச்சி; கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு; ஆந்திராவின் திருப்பதி, விஜயவாடா; தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு செல்லும் பஸ்கள், சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை ஒன்றாக முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். செல்லவும், திரும்பவும் டிக்கெட்களை முன் பதிவு செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
கூடுதல் பஸ்கள், டிக்கெட் முன்பதிவு குறித்து, தகவல் வேண்டுவோர் www.ksrtc.karnataka.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
