/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
4 வயது சிறுமி கொலை தாய், கள்ளக்காதலன் கைது
/
4 வயது சிறுமி கொலை தாய், கள்ளக்காதலன் கைது
ADDED : செப் 11, 2025 07:17 AM

ஹாவேரி : கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த, 4 வயது மகளை கொலை செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலர் கைது செய்யப்பட்டனர்.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தாலுகாவின், ஏ.ஜே.கே.ஜி., காலனியில் வசிப்பவர் மஞ்சுநாத், 40. இவரது மனைவி கங்கம்மா, 36. தம்பதிக்கு பிரியங்கா, 4, என்ற மகள் இருந்தார். சில ஆண்டாக, கங்கம்மாவுக்கு, அன்னப்பா, 37, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த கணவரும், குடும்பத்தினர் கண்டித்தும் அவர் திருந்தவில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மகளை அழைத்து கொண்டு கள்ளக்காதலருடன் கங்கம்மா சென்றுவிட்டார். இவர்கள் குட்டத அன்வேரி கிராமத்தில் வசித்தனர். தங்களின் கள்ளக்காதலுக்கு, மகள் இடையூறாக இருப்பதால், கொலை செய்ய முடிவு செய்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி, அன்னப்பாவும், கங்கம்மாவும் சேர்ந்து மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
உடலை துங்கா மேலணை திட்டத்தின் கால்வாய் அருகில், தீ வைத்து எரித்து விட்டு தப்பியோடினர். இதை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த குத்தலா போலீசார், உடலை மீட்டனர். கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.
இதற்கிடையே மகளை பார்க்க முடியாமல் பரிதவித்த மஞ்சுநாத், பல முறை கங்கம்மாவின் வீட்டுக்கு சென்றார். ஆனால், மகளுக்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக மனைவி நாடகமாடினார்.
நேற்று முன்தினம் அங்கு சென்ற மஞ்சுநாத், 'நீ என்னுடன் வர தேவையில்லை. மகளையாவது என்னிடம் கொடு' என, மன்றாடினார். அப்போதும் கங்கம்மா மழுப்பலாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த மஞ்சுநாத், உடனடியாக ஹாவேரி ஊரக போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார்.
போலீசாரும் அங்கு வந்து கங்கம்மாவை விசாரித்த போது, மகளை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின் அவரையும், அவரது கள்ளக்காதலர் அன்னப்பாவையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, சிறுமியை எரித்த இடத்துக்கு சென்று, போலீசார் பார்வையிட்டனர். அந்த உடலை குத்தலா போலீசார், அடையாளம் தெரியாத உடலாக கருதி, தகனம் செய்தது தெரிந்தது.