ADDED : ஜன 03, 2026 06:16 AM

- நமது நிருபர் -
வீடுகளில் சிற்றுண்டிக்கு, அவ்வப்போது புலாவ் செய்வது வழக்கம். உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட், பீன்ஸ் உட்பட, பல விதமான காய்கறிகள் பயன்படுத்தி புலாவ் செய்வர். காலி பிளவர் புலாவ் சாப்பிட்டுள்ளீர்களா. ஒரு முறை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
l பாசுமதி அரிசி - 1 கப்
l காலிபிளவர் - 1
l பட்டாணி - அரை கப்
l வெங்காயம் - 1
l தக்காளி - 3
l இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
l பச்சை மிளகாய் - 2
l மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
l மிளகாய் துாள் - 1 ஸ்பூன்
l சீரக துாள் - 1 ஸ்பூன்
l கரம் மசாலா - 1 ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
l பட்டை - சிறிய துண்டு
l லவங்கம் - 4
l ஏலக்காய் - 2
l எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போடவும். அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து மூன்று, நான்கு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய காலி பிளவர், பச்சை மிளகாய், பட்டாணி போட்டு கிளறவும். சில நிமிடங்கள் வறுத்த பின், சிறிதாக நறுக்கிய தக்காளி, மிளகாய் துாள், மஞ்சள் துாள், சீரக துாள், கரம் மசாலா போட்டு சில நிமிடங்கள் கிளறவும்.
இந்த கலவையில் அரிசியை போட்டு, நன்றாக கலந்து தேவையான உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடி, 10 முதல் 12 நிமிடங்கள் வரை, மிதமான தீயில் வைத்திருந்தால் சுவையான காலிபிளவர் புலாவ் ரெடி. வெங்காய பச்சடியுடன், சூடாக பரிமாறலாம். காலிபிளவர் புலாவ் செய்வதும் எளிது. சுவையாகவும் இருக்கும். பள்ளிக்கு செல்லும் சிறார்களுக்கு, மதிய உணவுக்கு கொடுத்து அனுப்பலாம்.

