/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' விசாரணை அறிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
/
'முடா' விசாரணை அறிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
ADDED : பிப் 13, 2025 05:11 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீதான முடா வழக்கின் விசாரணை அறிக்கையை, உயர் அதிகாரிகளிடம், மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் சமர்ப்பித்து உள்ளார்.
மைசூரு முடாவில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வீட்டுமனைகள் வாங்கியதாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நில உரிமையாளர் தேவராஜ் மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். மூன்று மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணை நடந்ததால், அறிக்கை தாக்கல் செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர் என்று, நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யபடலாம் என்றும் தகவல் வெளியானது. சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்றும், உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்நிலையில் மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் நேற்று, பெங்களூரு வந்தார்.
லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., மனீஷ் கர்பீகர், ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வர் ராவ் ஆகியோரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அறிக்கையை நன்கு ஆய்வு செய்த பின், அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சுப்பிரமணீஸ்வர் ராவ் திட்டமிட்டுள்ளார்.