ADDED : ஏப் 13, 2026 01:17 AM

தங்கவயல்: தங்கவயல் நகராட்சி அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் சிலை, சிமென்டால் உருவாக்கப்பட்டு உள்ளது. இச்சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் விழுந்து விடலாம்.
ஆபத்தில் உள்ள இச்சிலையை அகற்றி, உலோக சிலை வைக்க வேண்டும் என்று நகராட்சியில் அப்போதைய சில கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பல்வேறு அமைப்பினரும் ஆதரவாக குரல் எழுப்பி வந்தனர்.
இதனால், நகராட்சியில் 202 4, நவம்பர் 18ல் உலோக சிலை அமைக்க டெண்டர் கோரப்பட்டது. டெண்டரில், 'அரவிந்த் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தினர், 15 லட்சத்து 5,000 ரூபாய்க்கும், ஆர்.சிவகுமார் 16 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஜி.ஆர்.எஸ்., இன்ஜினியரிங் 16 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் டெண்டர் கோரியிருந்தனர்.
இந்த மூன்று பேரில் அரவிந்த் கன்ஸ்ட்ரக் ஷன் குறைவான தொகைக்கு, ஒப்பந்தம் கேட்டிருந்ததால், அவருக்கு வழங்கப்பட்டது. ஆயினும் இதுவரை பணி துவங்கப்படவில்லை.
நாளை 'அம்பேத்கர் ஜெயந்தி' என்பதால், சிலையின் விரிசலை மறைக்க வழக்கம் போல, பெயின்ட் வைத்து ஒட்டு போடும் வேலையை செய்துள்ளனர். சிலையின் உடைந்த கைவிரல்களில், பெயின்ட் பூசி மெழுகி உள்ளனர்.
'அம்பேத்கர் சிலை கீழே விழும் வரை, நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்களா' என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
