காங்., சிறுபான்மையினர் பிரிவு அதிரடியாக கலைத்த சிவகுமார்
காங்., சிறுபான்மையினர் பிரிவு அதிரடியாக கலைத்த சிவகுமார்
ADDED : ஏப் 13, 2026 01:17 AM

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அப்துல் ஜப்பாரின் ராஜினாமா கடிதத்தை, துணை முதல்வர் சிவகுமார் ஏற்று கொண்டு உள்ளார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் கலைத்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவராக இருந்தவர் அப்துல் ஜப்பார். எம்.எல்.சி.,யாகவும் உள்ளார். தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர். தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சமர்த்தை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை என்று, அப்துல் ஜப்பார் மீது கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினர்.
இதனால், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, துணை முதல்வரும், கட்சியின் மாநில தலைவருமான சிவகுமாருக்கு கடிதம் எழுதினார்.
அப்துல் ஜப்பார் போலவே, சிறுபான்மையினர் பிரிவு துணை தலைவர் முகமது சிராஜ், செயலர்கள் அப்துல் கனி, நுார் அகமது, உசேன் உக்கடகத்ரி ஆகியோரும் ராஜினாமா கடிதங்கள் அனுப்பினர்.
இது முஸ்லிம்கள், காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதை காட்டியது. இதனால் கடுப்பான துணை முதல்வரும், கட்சியின் மாநில தலைவருமான சிவகுமார், அப்துல் ஜப்பார் ராஜினாமா கடிதத்தை நேற்று ஏற்று கொண்டார். மற்றவர்கள் கடிதங்கள் பரிசீலனையில் உள்ளன.
மேலும், அப்துல் ஜப்பார் தலைமையில் அமைக்கப்பட்ட, சிறுபான்மையினர் பிரிவு குழுவையும் சிவகுமார் கலைத்தார். புதிய உறுப்பினர்களை கொண்ட குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது. கலைக்கப்பட்ட குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அனைவரும், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
