ADDED : மே 28, 2026 03:17 AM

- நமது நிருபர் -
உத்தர கன்னடா மாவட்டத்தில் அடர்ந்த காடுகளுடன் அழகாக காட்சியளிக்கும் இடம் தான் சிர்சி. இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் என்றே கூறலாம். இங்கு, கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களை, இக்கட்டுரை விவரிக்கிறது .
பென்னே ஹோலே நீர்வீழ்ச்சி கன்னட மொழியில், ' பென்னே' என்றால் வெண்ணெய் என்று பொருள். அகநாசினி ஆற்றின் கிளை நதி, மலைப் பாதையில் இருந்து கீழ்நோக்கிப் பாயும் போது, துாரத்திலிருந்து பார்க்க வெண்ணெய் உருகி ஓடுவது போலத் தோன்றுவதால், நீர்வீழ்ச்சிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
அடர்ந்த காடுகளுக்கு இடையே 2 கி.மீ., காடுகளின் நடுவே 'டிரெக்கிங்' செய்து, நீர்வீழ்ச்சியை அடைவதே மிரட்டலான அனுபவமாக இருக்கும். இது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
மகோத் நீர்வீழ்ச்சி சிர்சியில் இருந்து, 45 கி.மீ.,யில் எல்லப்புராவில் மகோத் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பிரமாண்டமான நீர்வீழ்ச்சியாகும். பசுமையான காடுகளுக்கு நடுவே, 650 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக பாறைகளின் மீது பாய்ந்து குதிக்கும் இது, பார்ப்போரை சிலிர்க்க வைக்கும். இங்கு ஏராளமான வியூ பாயின்ட்கள் உள்ளன.
இங்கு நின்று, நீர்வீழ்ச்சியின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். படங்கள் எடுத்து மகிழலாம். இங்கு ஏராளமான உணவுக் கடைகளும் உள்ளன.
ஷிவமகாட்டே ஏரி சி ர்சிக்கு மிக அருகிலேயே ஷிவமகாட்டே ஏரி உள்ளது. இங்கு மாலை வேளையில் உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அமைதியாக இயற்கையை ரசிக்க, ஏற்ற இடமாக இருக்கும்.
சிர்சியை சுற்றி பார்க்க அக்டோபர் முதல், மார்ச் மாதத்தில் சென்றால் குளிர்ச்சியான காலநிலையை அனுபவிக்கலாம். நீர்வீழ்ச்சிகளின் முழு அழகைக் காண செப்டம்பர்,- நவம்பர் மாதங்களில் செல்லலாம். சிர்சியில் கிடைக்கும் மீன் உணவுகள், மலநாடு பகுதியின் பாரம்பரிய பலாப்பழம் ஆகியவற்றை கட்டாயம் சுவைக்க வேண்டும்.
