காங்., குறித்து என் கருத்துகள் திரிக்கப்பட்டு விட்டன: சலவாதி
காங்., குறித்து என் கருத்துகள் திரிக்கப்பட்டு விட்டன: சலவாதி
UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 07:07 PM

பெங்களூரு: ‘‘காங்கிரஸ் குறித்து பேசி என் கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டு உள்ளன,’’ என, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி விளக்கம் அளித்து உள்ளார்.
கோலாரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.,வின், ‘ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ பேரணியில் பங்கேற்ற கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சி, நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயன்றால், அக்கட்சி துண்டு துண்டாக வெட்டி அரபிக்கடலில் வீசப்படும்’ என்றார்.
இதற்கு அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து, பெங்களூரில் உள்ள சலவாதி வீட்டின் முன், காங்கிரஸ் கட்சியினர், நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் சலவாதி நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:
நாட்டில், காங்கிரஸ் பரப்ப நினைக்கும் அரசியல் அராஜகத்தை மட்டுமே விமர்சித்தேன். எந்தவொரு தனிநபர் குறித்தும் பேசவில்லை. எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் செயல்பாடுகளை விமர்சித்தேன். ஆனால், என்னுடைய பேச்சை திரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பரப்பப்படுகிறது.
என்னுடைய அரசியல் எதிரிகள், இதை வேண்டுமென செய்கின்றனர். அவர்களால் என்னுடைய வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை. தனிப்பட்ட வகையில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
