மாயமான பொறியாளர் பர்வீஸ் ம.பி.,யில் போட்டோ சிக்கியது
மாயமான பொறியாளர் பர்வீஸ் ம.பி.,யில் போட்டோ சிக்கியது
ADDED : செப் 30, 2026 11:05 PM

கதக்: காணாமல் போன அரசு உதவி பொறியாளர் பர்வீஸ், மத்திய பிரதேசத்தின் போபால் ரயில் நிலையத்தில் நடந்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின், கதக் மாவட்ட உதவி பொறியாளர் பர்வீஸ், 34. குடிநீர் திட்டப்பணிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்காத சூழலில், ஒப்பந்ததாரர்களின் தொல்லை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டு, கடந்த 13ம் தேதி தலைமறைவானார். இவரை தேடும் பணியில் ஐந்து தனிப்படைகள் ஈடுபட்டு உள்ளன.
இவர் காணாமல் போய் நேற்றுடன் 18 நாட்கள் ஆகின்றன. இருப்பினும், இவரை கண்டறிய முடியவில்லை. ஆந்திராவின் விஜயவாடாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால், ஆந்திராவில் இரண்டு தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் உள்ளனர்.
இந்நிலையில், அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் ரயில் நிலையத்தில் நடந்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள், போலீசாருக்கு நேற்று கிடைத்தன.
மேலும், போபாலிலிருந்து வேறு இடத்திற்கு பர்வீஸ் பயணம் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமாரக்களை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், போபாலுக்கு விசாரிப்பதற்காக போலீசார் சென்று உள்ளனர்.
இதற்கிடையே, காணாமல் போன பர்வீஸ் தந்தை ஜாபரிடம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
''மாநில அரசு எந்த பிரச்னையையும் தீர்த்து வைக்கும். அவரை கண்டறிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்,'' என, ஈஸ்வர் கூறினார்.
