தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு முதலிடம் பிடித்த பத்ராவதி இளம்பெண்
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு முதலிடம் பிடித்த பத்ராவதி இளம்பெண்
UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 05:14 PM

– நமது நிருபர் –
பத்ராவதியை சேர்ந்த இளம்பெண் நாட்டிற்கு சேவை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு அகாடமி நடத்திய தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து, மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் உள்ள திம்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா.
இவர், இங்குள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எக்கு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவரின் மகள் ஸ்ரேயா கவுடா, 19. பி.ஜி.எஸ்., பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். 10ம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
பெங்களூரில் உள்ள பேஸ் பி.யு., கல்லுாரியில் பி.யு.சி., முடித்த அவர், சூரத்கல் பொறியியல் கல்லுாரியில் மின்னியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முதல் செமஸ்டர் படித்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவருக்கு தோன்றியது.
இதற்காக, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஏ.எப்.பி.ஏ., அகாடமியில் 14 நாட்கள் பயிற்சி பெற்றார். என்.டி.ஏ., தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்து ஸ்ரேயா கவுடா கூறியதாவது:
ஆரம்பத்தில் இருந்தே என்.டி.ஏ., தேர்வுக்கு தயாராகி வந்தேன். முதல் 10 இடங்களுக்குள் வருவேன் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
என் தந்தை, தாய், சகோதரர் உட்பட என் உறவினர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த சாதனைக்கு என் குடும்பத்தினர், உறவினர்கள் ஆதரவாக இருந்தனர். அடுத்து, ராணுவ வான் பாதுகாப்பு பிரிவில் மூன்று வருட பயிற்சி பெற வேண்டும்.
இந்த பயிற்சி, புனே அருகே உள்ள கந்துாரில் நடக்கும். பின், டேராடூனில் ஒரு வருட பயிற்சி பெறுவேன். நான் இந்திய ராணுவத்தின் ஏவுகணை பிரிவில் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரேயா கவுடா தந்தை நாகேந்திரா கூறுகையில், ‘‘என் மகள் நாட்டுக்கு சேவை செய்ய என்.டி.ஏ., தேர்வு எழுத விரும்பி, அதற்காகவே பயிற்சி பெற்றார். மகள் நாட்டுக்கு சேவை செய்யப் போகிறார் என்பது எங்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது,’’ என்றார்.
