ADDED : ஏப் 11, 2025 11:06 PM

பெங்களூரு: ''ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் துறையை புரிந்து கொண்டால் மட்டுமே, நிர்வாகத்தில் கட்டுப்பாடு மற்றும் மாற்றங்களை கொண்டு வர முடியும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வருவாய்த்துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். இதில், அவர் பேசியதாவது:
வருவாய்த்துறை, அரசின் தாய்த்துறை போன்றதாகும். விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளது. மிக அதிகமான விண்ணப்பங்கள் வருவது இந்த துறைக்கு தான். இந்த துறை அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
நான், தாலுகா வாரிய உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை துவக்கி, எம்.எல்.ஏ., அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், துணை முதல்வர், இரண்டு முறை முதல்வராக பணியாற்றினேன்.
இவ்வளவு அனுபவங்கள் இருந்தும், வருவாய்த் துறையின் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லையே என்ற வருத்தம், என்னை வாட்டி வதைக்கிறது.
வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, தன் துறையை நன்றாக புரிந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு அமைச்சரும் துறையை நன்றாக புரிந்து கொண்டால் மட்டுமே, துறையில் மாற்றங்களை கொண்டு வர முடியும். அனைத்து தகவல்களும் விரல் நுனியில் இருக்க வேண்டும்.
அமைச்சராவது முக்கியம் அல்ல. மக்களின் மீது அக்கறை இருப்பது முக்கியம். கிருஷ்ண பைரேகவுடா அமைச்சரான பின், வருவாய்த் துறை சிறப்பாக செயல்படுகிறது.
மேலும் நன்றாக செயல்பட வேண்டும். நில ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் அரசின் சொத்துகளை காப்பாற்ற முடியும். தொழில் நுட்பங்களை பயன்படுத்தினால், எளிதாக ஆய்வு செய்ய முடியும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், சர்வே பணிகள் முடிய வேண்டும். வருவாய்த்துறைக்கு வலு சேர்க்க 750 சர்வேயர்கள் நியமிக்கப்படுவர். இரண்டு மாதங்களில் நியமன உத்தரவு வழங்கப்படும்.
இடைத்தரகர்களின் தொல்லை இருக்க கூடாது. இடைத்தரகர்களுக்கு வாய்ப்பளிக்காமல், விவசாயிகளுக்கு தேவையான சேவைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.