UPDATED : அக் 14, 2026 12:03 AM
ADDED : அக் 13, 2026 11:36 PM
பைப்புக்குள் பதுங்கிய சிறுத்தை
கதக், முன்டரகியின் சிங்கனராயனகேரி கிராமத்தின் அருகில் உள்ள, விவசாய குளம் அருகில் நேற்று மதியம், சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டது.
குளத்தில் இருந்த பைப்புக்குள், சிறுத்தை அமர்ந்திருந்தது. இதை பார்த்து ஆடு மேய்ப்போர், அங்கிருந்து ஓடிவிட்டனர். தண்ணீர் குடிக்க வந்த சிறுத்தை, குளம் வற்றியிருந்ததால் சோர்வடைந்து அமர்ந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
மெத்தை தொழிற்சாலையில் தீ
பெங்களூரின் பீன்யா தொழிற் பகுதியில், கர்லான் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று மாலை தீப்பிடித்தது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
விஜயபுராவில் வாட்டும் வெயில்
விஜயபுரா மாவட்டத்தில் பொதுவாக அக்டோபரில் வெப்பத்தின் தாக்கம் 30 டிகிரி செல்ஷியஸ் இருக்கும். இம்முறை 36 டிகிரி செல்ஷியஸ் வரை எட்டியுள்ளது. இந்த வெப்பத்தை தாங்க முடியாமல், சிறார்கள், மூத்த குடிமக்கள் உடல் நிலை பாதிக்கிறது. மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
8.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்
கர்நாடகாவில் கடந்த மாதம் அரசு பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் சென்ற 4,382 பயணியரிடமிருந்து 8,45,304 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
