ADDED : நவ 21, 2026 04:28 PM
சிக்கமகளூரு: கொப்பாலின் தேசிய நெடுஞ்சாலை – 169ல், அம்மடி கிராமத்தின் அருகில், நேற்று மாலை பள்ளி பஸ் சென்று கொண்டிருந்தது. 26 மாணவர்கள் இருந்தனர். ஓட்டுநர் லட்சுமண், 65, என்பவருக்கு இதய வலி ஏற்பட்டது. அபாயத்தை உணர்ந்த அவர், பஸ்சை நிறுத்த முயற்சித்தார். முடியாததால், வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி, பஸ்சை நிறுத்தினார். அதன்பின் கீழே விழுந்து உயிரிழந்தார். சிறார்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
துமகூரு: மதுகிரி தாலுகா அலுவலகத்தில் தன் நில ஆவணங்களை பெற, விவசாயி நாகராஜ், நேற்று முன் தினம் காலை வந்தார். மாலையில் ஆவணங்களை தருவதாக அதிகாரிகள் கூறியதால் அங்கேயே காத்திருந்தார். இரவு 8:00 மணியாகியும் ஆவணங்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தன் ஊருக்கு செல்ல பஸ் இல்லாததால், குளிரை பொருட்படுத்தாமல் தாலுகா அலுவலக கேட் முன், கோணிப்பை போர்த்தி கொண்டு உறங்கினார். இதையறிந்த தாசில்தார் நந்தினி, அங்கு வந்து விவசாயிக்கு உணவு வரவழைத்து கொடுத்தார். அலுவலகத்துக்குள் படுக்கவும், வசதி செய்து கொடுத்தார். ஆவணங்களை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தார்.
பெங்களூரு: உலக அளவிலான கியோகுஷின் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, ஜப்பானில் நாளை துவங்கி, நவ., 24ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய அணியின் சார்பாக பெங்களூரை சேர்ந்த விஷால்குமார் ஷர்மா, எட்வர்ட் செபாஸ்டியன், சாய் சமர்த், வினய் பிள்ளை, அனிருத் முரளி, டில்லியை சேர்ந்த ராஜ்புத் ஆகிய ஆறு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
