UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 10:44 PM
பெங்களூரு: அடுக்கு மாடி கட்டடத்தில் மர்ம பொருள் வெடித்தது குறித்து, என்.ஐ.ஏ., விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு புலிகேசி நகர் அடுத்த ஜாமியா மசூதி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி கட்டடத்தில் கடந்த 20ம் தேதி மர்ம பொருள் வெடித்தது. இதில் இரண்டு கூலி தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். புலிகேசி நகர் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, பயங்கரவாத எதிர்ப்பு படையினர் விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கட்டடத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சாலையில் கிடந்த பையை 4வது மாடிக்கு எடுத்து வந்தனர். அந்த பையை திறக்கும்படி மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து உள்ளார். இதன்படி, பையை தொழிலாளர்கள் திறக்கும் போது, அந்த பையில் உள்ள மர்ம பொருள் வெடித்துள்ளது
இதில், வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டனர். இந்த வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை, போலீசாரிடமிருந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் பெற்றனர். எனவே, இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடயவியல் ஆய்வக அறிக்கை வெளியான பின்பே, வெடித்தது வெடிகுண்டு என்பது தெரியவரும். விபத்து நடந்த பகுதியை புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் நேற்று காலையில் பார்வையிட்டார்.
