/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒன்பது ஆண்டுகள் காத்திருப்புக்கு... இன்று விடிவு! மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ; துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
/
ஒன்பது ஆண்டுகள் காத்திருப்புக்கு... இன்று விடிவு! மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ; துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ஒன்பது ஆண்டுகள் காத்திருப்புக்கு... இன்று விடிவு! மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ; துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ஒன்பது ஆண்டுகள் காத்திருப்புக்கு... இன்று விடிவு! மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ; துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ADDED : ஆக 10, 2025 08:39 AM

பெங்களூரு : பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார். இதன்மூலம் பொதுமக்களின் ஒன்பது ஆண்டுகள் காத்திருப்புக்கு விடிவு காலம் பிறக்கிறது. பெங்களூரு நகரில் செல்லகட்டா - ஒயிட்பீல்டு; மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது பாதையாக நகரின் முக்கிய பகுதியான ஜெயநகர் சவுத் என்ட் சர்க்கிள் பகுதியான ராஷ்ட்ரீய வித்யாலயா சாலை எனும் ஆர்.வி.ரோடு முதல் தமிழகத்தின் ஓசூர் சாலையில் உள்ள பொம்மசந்திரா வரை மெட்ரோ பாதை அமைக்கும் பணிக்கு, 2016 ஜூன் 16ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் 18.82 கி.மீ., துாரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்திற்காக 5,056 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. 2019ல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை துவங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இந்தத் திட்டத்திற்காக ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. இந்த ரயில்களை தயாரிக்க சீன நிறுவனத்துடன் மெட்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை என அடுத்தடுத்து ஏகப்பட்ட சிக்கல்களுக்கு இடையே கொரோனா ஊரடங்கும் பணிகளில் தாமதம் ஏற்பட வழி வகுத்தது.
இதனால் பணி முடிக்கும் காலம், தள்ளிக்கொண்டே சென்றது. பல முறை இலக்கு நிர்ணயித்தும் எதுவும் நினைத்தபடி முடியாமல் போனது. இதனால் திட்ட செலவு 7,160 கோடி ரூபாயை கடந்தது.
சிக்னல் அனைத்துத் தடைகளையும் தாண்டி, 2022ம் ஆண்டே பணிகள் முழுமையாக முடிந்து, மெட்ரோ ரயில்கள் ஓடும் என, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்தது.
ஆனாலும் பணிகள் இழுபறியால் ஒரு வழியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத் திலேயே பாதை அமைக்கும் பணிகள் முடிந்தன.
இதனால் கடந்த ஆண்டு நவம்பரில், மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என்று கூறப்பட்டது. பின், டிசம்பர் என்றும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ரயில் சேவை துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ரயில் இயக்க தாமதம் தொடர்ந்தது. என்ன காரணம் என்பது பொதுமக்களுக்கு தெரிவிக்கப் படாமலேயே இருந்தது.
மார்ச், மே, ஜூன் என ஒவ்வொரு மாதமாக, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் இழுத்தடித்தனர். இதனால் கோபம் அடைந்த பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயிலை உடனடியாக இயக்க வலியுறுத்தி, பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார்.
ரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் மனோகர்லால் கட்டாரிடமும் கோரிக்கை விடுத்தார். ஒரு வழியாக, 'ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே, மெட்ரோ சேவை துவங்கப்படும். பிரதமர் மோடி, ஆகஸ்ட் 10ம் தேதி துவக்கி வைப்பார்' என, மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்தார்.
வரப்பிரசாதம் அதன்படி இன்று ஆர். வி.ரோடு - பொம்மசந்திரா இடையே, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை துவங்க உள்ளது. காலை 11:45 மணிக்கு ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயிலை கொடியசைத்து, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
பின், ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை, மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.
எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.ஐ.டி., ஆடிட்டோரியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கெம்பாபுரா - ஜே.பி.நகர் 4வது பேஸ்; ஹொசஹள்ளி - கடபகெரே இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகளை துவக்கி வைக்கிறார். 44.65 கி.மீ., துார, இந்த வழித்தடம் 15,610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ரயில் சேவை இன்று துவங்குவதன் மூலம், பொதுமக்களின் ஏறக்குறைய ஒன்பது ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இதனால் மெட்ரோ தினசரி பயணியரின் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.