/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கட்சியை யாரும் பிளாக்மெயில் செய்ய முடியாது'
/
'கட்சியை யாரும் பிளாக்மெயில் செய்ய முடியாது'
ADDED : ஆக 02, 2025 01:58 AM

பாகல்கோட்: ''முதல்வர் சித்தராமையா உட்பட, யாராலும் காங்கிரஸ் மேலிடத்தை 'பிளாக்மெயில்' செய்ய முடியாது,'' என, கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசில் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை பற்றியும், மேலிடமே முடிவு செய்யும்.
தலைமை மாற்றம் விஷயத்தில், கட்சி மேலிடத்தை 'பிளாக்மெயில்' செய்வதாக கூறுவது சரியல்ல. அப்படி செய்வதற்கு, இன்னும் யாரும் பிறக்கவில்லை.
பதவியில் இருந்து விலகும்படி, மேலிடம் கூறினால், முதல்வர் சித்தராமையா அதை பின்பற்றுவார். சித்தராமையா உட்பட, யாராலும் காங்கிரஸ் மேலிடத்தை பிளாக்மெயில் செய்ய முடியாது.
எங்களுக்கு கட்சியே பெரியது, கட்சியை விட நாடே பெரியது என, நாங்கள் நினைக்கிறோம்.
நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரை விட, மைசூருக்கு முதல்வர் சித்தராமையாவின் பங்களிப்பு அதிகம் என, எம்.எல்.சி., யதீந்திரா கூறியதை நான் ஆட்சேபிக்கிறேன்.
கண்ணம்பாடி அணை கட்டும்போது, பணப்பிரச்னை ஏற்பட்டது. அப்போது நால்வடி கிருஷ்ண ராஜ உடையார், தம் வீட்டில் இருந்த தங்கநகைகளை விற்று, பணிகளை நிறைவு செய்தார்.
இப்படிப்பட்டவருடன், சித்தராமையாவை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல.
தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தி தெரிவித்ததில் தவறு இல்லை. அவர் மிகவும் மூத்த தலைவர்.
சாதாரண தொண்டராக இருந்து, இந்த அளவுக்கு வளர்ந்தார். வாய்ப்பு கை நழுவியது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வராக இருந்தபோது, அசோக் கெலாட், காங்., தேசிய தலைவராக பொறுப்பேற்க மறுத்தார்.
முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்தார். யாரும் பதவியை விட்டுத்தர விரும்புவது இல்லை. முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

