சமூக ஊடகத்தில் கண்மூடித்தனமாக பதிவிட உரிமை இல்லை: ஐகோர்ட்
சமூக ஊடகத்தில் கண்மூடித்தனமாக பதிவிட உரிமை இல்லை: ஐகோர்ட்
UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 08:00 PM
பெங்களூரு: ‘சமூக ஊடகத்தில் கண்மூடித்தனமாக பதிவிட உரிமை இல்லை’ என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடியை சேர்ந்தவர் தனுஷ் ஷெட்டி. 2025 ஏப்ரலில், பெல்தங்கடி போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில், அதே பகுதியை சேர்ந்த சுபா என்பவர், தன் மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்ய முயற்சித்தார் என்றும், தன்னை பற்றி அவரின் சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய செய்திகள், படங்களை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சுபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுபா முறையிட்டிருந்தார்.
நீதிபதி சுராஜ் கோவிந்தராஜ் பிறப்பித்த உத்தரவு:
சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பது என்பது உங்களுக்கு கிடைத்த இலவச உரிமம் அல்ல. ஒருவரிடம் சமூக ஊடக கணக்கு இருப்பதால் மட்டுமே, அவர் விரும்பும் செய்திகளை வெளியிட, உரிமம் இல்லை.
வெளியிடப்படும் செய்திகள் அரசியல் அமைப்பின் கருத்து சுதந்திரத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். இவ்வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. புகார்தாரர் மருத்துவமனை படுக்கையில் இருந்த புகைப்படம் செய்தி பொய்யானவை என்று கருத முடியாது.
எனவே, மனுதாரர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வழக்கை பெல்தங்கடி போலீசார் விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
