ராஜ்யசபா தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்
ராஜ்யசபா தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்
ADDED : ஜூன் 01, 2026 12:22 AM
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவுக்கு நடக்கவுள்ள தேர்தலுக்கு, வேட்புமனு தாக்கல் இன்று துவங்கவுள்ளது.
கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட ம.ஜ.த.,வின் தேவகவுடா, காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.,வின் நாராயண கொரகப்பா, ஈரண்ணா கடாடி ஆகியோரின் பதவி காலம், ஜூன் 25ம் தேதி முடிவடையவுள்ளது. இவர்களால் காலியாகும் இடங்களுக்கு, ஜூன் 18ம் தேதி தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகிறது. இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
ஆளுங்கட்சியான காங்கிரஸ், சட்டசபையில் வைத்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் பலம் அடிப்படையில், மூன்று இடங்களை கைப்பற்றலாம். பா.ஜ., வுக்கு ஒரு இடம் கிடைக்கும். ஆனால் ம.ஜ.த., வெறும் 18 எம்.எல்.ஏ., மட்டுமே வைத்துள்ளதால், ஒரு இடத்துக்கும் போட்டியிட முடியாது.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால், வெற்றி பெற வாய்ப்புள்ளது. தேவகவுடாவை தேர்வு செய்ய வேண்டும் என, அவரது நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
இது பற்றி தேவகவுடாவோ அல்லது மத்திய அமைச்சர் குமாரசாமியோ, பா.ஜ., மேலிடத்திடம் கேட்கவில்லை. வேட்பு மனு தாக்கல் துவங்கியும், பா.ஜ., இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து, தேவகவுடாவை களமிறக்கலாம் என, ஆலோசிக்கப்படுகிறது.
புதிய முதல்வர் பதவியேற்பு, அமைச்சரவை அமைக்க தயாராகும் காங்கிரசும் கூட, ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு ஜூன் 8ம் தேதியன்று, கடைசி நாளாகும்.
அதற்குள் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படலாம். முன்னாள் முதல்வர் சித்தராமையாவை ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய, காங்., மேலிடம் ஆர்வம் காட்டுகிறது. இதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
