/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மது பழக்கத்தை மறக்கடிக்கும் நுடிகல்லு ஆஞ்சநேயர்
/
மது பழக்கத்தை மறக்கடிக்கும் நுடிகல்லு ஆஞ்சநேயர்
ADDED : அக் 14, 2025 04:45 AM

ஹிந்து மதத்தவரிடம், 'உங்களுக்கு விருப்பமான கடவுள் யார்?' என கேட்டால் விநாயகர், துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகிய மூன்று கடவுள்களில் ஒருவரின் பெயரை கூறுவர். குறிப்பாக, அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அதிகம். இதே காரணத்தால், கர்நாடகாவில் வீதிக்கு வீதி ஆஞ்சநேயர் கோவில்களை பார்க்கலாம்.
கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஆனால், இந்த கோவில்களுக்கும், சிக்கமகளூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும் வித்தியாசம் உள்ளது.
சிக்கமகளூரு இயற்கை அழகுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு புராதன கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. சிக்கமகளூரு நகரின், அம்பளே கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரட்டை விக்ரகங்கள் உள்ளன.
கோவிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கோவில் இருக்கவில்லை. ஆஞ்சநேயர் விக்ரகத்தை திறந்தவெளியில் பிரதிஷ்டை செய்து, கிராமத்தினர் வழிபட்டனர். ஒருநாள் ஆஞ்சநேயர் விக்ரகத்தை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அப்போது, குடிபோதையில் கடவுளை பார்க்க நின்றிருந்த நபர், 'ஊரில் எத்தனையோ கடவுள்களுக்கு கோவில் உள்ளது. ஆனால் உனக்கு ஒரு கோவில் இல்லையே' என்றாராம்.
அந்நபர் அப்படி கூறியவுடன், ஆஞ்சநேயர் விக்ரகம் தானாகவே அசைந்தது. இவ்வேளையில் அங்கிருந்த பக்தர் மீது, அருள் வந்து, 'எனக்கு இங்கேயே கோவில் கட்டுங்கள்' என, கட்டளையிட்டார். அதன்பின் கிராமத்தினர் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டினர்.
இதை, 'நுடிகல்லு ஆஞ்சநேயர்' என, அழைக்கின்றனர். நுடி என்றால் கன்னட மொழியில் சொல்வது என்ற அர்த்தமாகும். குடிகார நபர் சொன்ன வார்த்தைகளால் கட்டப்பட்ட கோவிலாகும். கல்லால் செதுக்கப்பட்ட விக்ரகம் என்பதால், கோவிலுக்கு இந்த பெயர் வந்தது.
இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள், இந்த கோவிலுக்கு வந்து வேண்டினால், அதில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம். எனவே, குடும்பத்தில் யாராவது மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால், கோவிலுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
வீட்டில் பணக்கஷ்டம் இருந்தால், வீடு, சொத்து உட்பட எந்த பிரச்னை இருந்தாலும், ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால், அனைத்து பிரச்னைகளும் காணாமல் போகின்றன. நிம்மதியான வாழ்க்கை பெறுகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். அமைதியான சூழ்நிலையில், கோவில் அமைந்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 241 கி.மீ., மங்களூரில் இருந்து, 148 கி.மீ., மைசூரில் இருந்து 171 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. சிக்கமகளூரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் அம்பளே கிராமம் உள்ளது.
அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. ரயில் அல்லது பஸ்சில் வந்திறங்கி, வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை
- நமது நிருபர் - .