/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டிற்கு பாம்பு வராமல் தடுக்கும் கோவில்
/
வீட்டிற்கு பாம்பு வராமல் தடுக்கும் கோவில்
ADDED : அக் 14, 2025 04:48 AM

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வர். அதிலும் நாக பாம்பு பெயரை கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்குவர்.
பாம்பு துரத்துவது, கொத்துவது போன்று கனவு கண்டால் ஏதோ கெட்டது நடக்க போவதாக மக்கள் பயப்படுவது இயல்பு. இதுபோல வீட்டின் அருகே அடிக்கடி பாம்பு சுற்றி திரிந்தால், அந்த பாம்பால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்றும் நினைப்பர். வீட்டின் அருகிலோ அல்லது வீட்டிற்குள்ளோ பாம்பு வராமல் தடுக்க ஒரு கோவில் உள்ளது.
பெலகாவியின் அதானி தாலுகா, அல்லுட்டி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பயலிங்கேஸ்வரர் கோவில். நாகலிங்கத்திற்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலோ, வீட்டிற்குள்ளோ பாம்பு சுற்றி திரிவதை கண்டால், வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி மணலை இந்த கோவிலுக்கு எடுத்து வந்து, நாக சிலை முன் வைத்து வழிபட்டு மணலை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பாம்பு தோன்றிய இடத்தில் வைத்தால் மீண்டும் பாம்பு வராது என்று நம்பப்படுகிறது.
இக்கோவிலில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதுபோல ஆண்டிற்கு ஒரு முறை விஜ்ரும்பன என்ற பெயரில் விழா நடக்கிறது. இதில் அதானி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களும், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.
நாக சிலை முன்பு வைத்து வழிபடும் மணலை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால், பாம்பு மீண்டும் வராமல் இருப்பது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனால், இக்கோவிலை மர்ம கோவிலாகவே பக்தர்கள் பார்க்கின்றனர்.
கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து அதானி, 600 கி.மீ., துாரத்தில் உள்ளது.பஸ், ரயில், விமான சேவைகள் உள்ளன
-- நமது நிருபர் -- .